உணவை பொட்டலங்களில் வாங்கிச் செல்லவே மக்கள் விருப்பம்

கிள்ளான் –

கிள்ளானில் இயங்கும் பல உணவகங்கள் இன்னும் அமர்ந்து உண்ணும் நடவடிக்கையைத் தொடங்கவில்லை. வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து பொட்டலங்களில் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையையே அவை தொடர்கின்றன. காப்பார், போர்ட்கிள்ளான் பகுதிகளிலும் இந்நடவடிக்கையே தொடர்கிறது.

தெங்கு கிளானா பகுதியில் ஒரு சில உணவகங்கள் அமர்ந்து உண்ணும் நடவடிக்கையை தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக பொட்டலங்களில் வாங்கிச் சென்றார்கள். தற்போது அரசாங்கம் விதித்திருக்கும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புடன் உணவகத்தை திறந்துள்ளனர்.

பெரும்பாலான உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் கட்டிக் கொடுப்பதிலே அக்கறை செலுத்தி வருகின்றன. காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரையில் உணவகங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய தெங்கு கிளானா ஜெய்ஹிந்த் உணவக உரிமையாளர் நா. நாகராஜன், கடையின் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கிய பின்னர் முழுமையாகத் திறப்பதற்கு ஆவன செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் உணவகத்தில் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கியிருந்தாலும் கோவிட்-19 தொற்றுப் பாதிப்பைத் தொடர்ந்து பொட்டலங்களில் வாங்கிப் பழகிப்போன வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அப்படிச் செய்யவே விருப்பப்படுகின்றனர்.

கடைகளில் அமர்ந்து உண்ணுவதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போது உள்ள நிலையில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது. சொந்தப் பாதுகாப்பு கருதியும் அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும் இரவு நேரங்களில் மக்கள் வெளிவருவதைக் குறைத்துக் கொண்டனர்.

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் முழுமையாகத் திறப்பதற்கு எண்ணம் இருந்தாலும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளதையும் நாகராஜன் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here