குதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்

தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தை கொரோனாவால் தற்போது பிரபலமாகி உள்ளது. இதுவரை மனிதர்கள் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த ருசிகர சம்பவம் குறித்து பார்ப்போம்…

காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்த படி ரஜோரிக்கு வந்துள்ளார். இவர் அதிகாரிகளிடம் எந்த முன்அனுமதியும் பெறவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அந்த நபர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்துள்ளார். கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்ட நிலையில், எந்த வாகன தொந்தரவும் இல்லாமல் குதிரையில் மகிழ்ச்சியாக சவாரி செய்துள்ளார். பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமை வார்டில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வரும் வரை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையை தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென அதன் எஜமானரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்ட நிலையில், லாடத்தில் தனியாக கட்டி, ‘கோரன்டைனில்’ குதிரை தற்போது உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here