புதுடெல்லி:
டெல்லியில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று (ஜனவரி 15) நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஓடுதளத்தை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இது முற்றிலும் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது என்றும், இதனால் விமானங்கள் இறங்க முடியாமலும் புறப்பட முடியாமலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அதிகம் பனிமூட்டம் இருந்தது. ஆனால் 5.30 மணியளவில் சற்றுக் குறையத் தொடங்கியது.
டெல்லியில் வழக்கமாக இப்பருவத்தில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது என்று சஃப்தர்ஜங் கண்காணிப்பகம் தெரிவித்தது.
இந்த நிலையில் மோசமான பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையம், பயணிகளுக்கு ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் விமான நிறுவனத்துடன் தொடர்புகொண்ட பிறகு பயணத்தைத் தொடங்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “அசௌகரியத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றும் அது மேலும் கூறியது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, ஏறக்குறைய 100 விமானங்கள் தாமதமடைந்தன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன,
இதற்கிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளை புதுடெல்லியுடன் இணைக்கும் 18 ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.





















