நானே பெர்சத்து கட்சியின் தலைவர் நேரம் வரும்,,,முஹிடினை பதவி நீக்கம் செய்வேன் துன் மகாதீர் அதிரடி அறிவிப்பு

 

பெர்சத்து கட்சிக்குத் தாமே இன்னும் தலைமை வகிப்பதாகவும் தனது பொறுப்பு நீக்கக் கடிதம் செல்லாது. உரிய நேரம் வரும்…என்னை நீக்கிய முஹிடின் யாசினை சரியான சட்ட அமலாக்கத்தின் வழி நீக்குவேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாக கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அம்கோர்ப் மால் கட்டடத்தில் அமைந்துள்ள பெர்சத்து கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற மகாதீர் தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்த அவர் இவ்வாறு கூறினார். 

 

யாரும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. நாற்காலியில் அமர்ந்தபடி தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த சில கருத்துககளை வெளியிட்டார்.

 

நான், எனது புதல்வர் முக்ரிஸ், சைட் சாடிக், மஸ்லி மாலிக், அமிருடின் அம்சா ஆகிய ஐவரும் முறையான சட்ட நடவடிக்கையை எடுப்போம்.

 

நாங்கள் ஐவரும் பெர்சத்து  கட்சியில் இருந்து  நீக்கப்பட்டிருப்பதாக பெர்சத்து அலுவலக நிர்வாகச் செயலாளர் சுஹாய்மி யாஹ்யா அறிவித்துள்ளார். 

 

இது சட்டவிரோதமானது.

 

நீக்கம் செய்யப்பட்ட ஐவரும் சட்டரீதியாகச் செயல்பட்டு எங்கள் பதவியை தற்காப்போம் என அவர் தெரிவித்தார்.

 

2018ஆம் ஆண்டில் துன் டாக்டர் மகாதீரால் பெர்சத்து கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதன் அவைத் தலைவராக அவர் இன்னமும் நீடிக்கிறார்.

 

  மகாதீர், பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவராகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தேசிய துணைத் தலைவராகவும் இருக்கின்றனர். பெர்சத்து கட்சித் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடினை எதிர்த்து முக்ரிஸ் போட்டியிடுகிறார்.

 

  கோவிட்- 19 தாக்கத்தினால் பெர்சத்து கட்சித் தேர்தலில் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துன் டாக்டர் மகாதீர் தலைமையில் ஓர் அணியும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் மற்றோர் அணியும் உள்ளதால் பெர்சத்து இரண்டாக உடைந்துள்ளது.

 

 மே 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வரிசையில் துன் டாக்டர் மகாதீர் முகமது, டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், சைட் சாடிக், மஸ்லீ மாலிக் மற்றும் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமிருடின் ஹம்ஸா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

 

  இவர்கள் ஐவரும் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக  சுஹாய்மி யாஹ்யா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று நேற்று பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

 

  இது குறித்து கருத்துரைத்த துன் மகாதீர் தலைமையிலான ஐவரும் தாங்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றனர்.

 

   மக்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அடிமட்டத் தொண்டர்களின் நலன்களுக்காகவும் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

  நாங்கள் ஒருபோதும் கட்சியின் சட்டவிதிகளை மீறவில்லை. நாங்கள் நீக்கப்பட்டதாகக் கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது. எங்களை நீக்குவதாக இருந்தால் சரியான காரணத்தைக் கூற வேண்டும்.

 

  பெர்சத்து கட்சி தடம் மாறாமல் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது. பதவி வெறி கொண்டிருக்கும் சில கட்சிகளுக்கு பெர்சத்து துணை போவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

  கட்சித் தேர்தல் மற்றும் பிரதமர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு அஞ்சியே எங்களைக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். எங்களை நீக்குவதற்கு பெர்சத்து அலுவலக நிர்வாகச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

 

  எங்களை நீக்கும் கடிதத்தில் கையெழுத்திடும் உரிமையும் அவருக்கு இல்லை என்று அந்த ஐவரும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

  தாங்கள் நீக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என அவர்கள் சூளுரைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here