இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.
இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.