தத்துவம் சொன்னா கேட்டுக்கணும்

சிலரின் பேச்சு பொருள் நிறைந்ததாக இருக்கும் சிலரின் பேச்சு பொருளற்றதாக இருக்கும். பேச்சின் ஓசையை வைத்தே பேச்சின் தன்மையை அறிந்துகொள்வார்கள் அறிந்துகொள்ளவும் முடியும். இது இயல்பான நடைமுறையாகும்.

எழுத்திலும் வஞ்சகப்புகழ்ச்சி இருக்கிறது. சிலர் வாய்ப்பந்தல் போடுவதும் உண்டு. சிலரின் பேச்சு கிண்டலாக இருக்கும், கடுமையாக இருக்காது, சிலரின் பேச்சு கடுமையாக இருக்கும் பொருளுள்ளதாக இருக்கும். இதற்கு இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் முகம்மது மஹ்புத் இணையம் வழி ஆற்றிய உரை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

நம் ஆரோக்கியம் நம்கையில் என்ற பொருளில் தன் உரையைத் தொடங்கிய அவர், கொரோனா என்பது உங்கள் மனைவியப்போன்றது, ஆரம்பத்தில் அதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் பிறகு உங்களால் ஏதும் செய்ய முடியாமல் போகும்.

நீங்கள் அதனுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்  என்ற சாராம்சம்தான் அந்த உரை.

இந்த உரை மிகுந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் உரையாகவே பலருக்கு இருக்கிறது. இவ்வுரை பலருக்கான முன்னுரை. குடும்பத்தில் ஆண்கள் கற்றுக்கொண்ட பாடம்.

இது, ஞானத்தின் பாடம் என்றாலும் தகும். கிருபானந்த வாரியார் சுவாமிகள்   இதைத்தான் சினிமாவில் கூறினார்.

தம்பீ! அவள் உன்வழிக்கு வரவில்லையென்றால் நீ அவள் வழிக்குச்செல் என்றும் உபதேசம் செய்தார்.

இதன் கருத்துதான் அந்த அதிகாரியின் உரை. அது எப்படி? சாமிகள் சொன்ன உரைக்கு எதிர்ப்பே வரவில்லை? ஏனென்றால் வாழ்க்கையின் தத்துவமே அதுதான், தத்துவத்திற்கு எதிர்ப்பு வராது.

அந்த அதிகாரி சொன்னதும் அதே தத்துவம் தான். சொன்னவர் மட்டுமே வேறு. வாழ்க்கையில் ஒத்துப் போதல் என்பதில் என்ன தவறு? இதில் மகளிர் மல்லுக்கு நிற்பது ஏன்? மகளிர் குறைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதுபற்றி ஏன் சிந்திக்கவில்லை. ஆண்களின் துயர் வெளிப்படுவதில்லை என்பது காரணமா?

பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் செய்வதற்குரிய பேச்சல்ல அது. வாழ்க்கை அனுபவம். இங்கு பெண்கள் இழிவு செய்யப்படவில்லை. உதாரணம் காட்டப்படிருக்கிறது.

கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்பது கருத்து. அதற்கான ஒப்பீடு திருமணம் ஆன பெண்கள். இதை நகைச்சுவையாக மாற்றிக்கொண்டால் சுவை அதிகமாகுமே!

வாழ்க்கை ரசிப்பதற்கானது, வசைபாடுவதற்கல்ல. அவரின் பேச்சு பொருள் நிறைந்த பேச்சு என்பதை அமைதியான ஆண்கள் மட்டுமே உணர்வர்.

தத்துவம் சொன்னா கேட்டுக்கணும் ஆராயக்கூடாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here