பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடக்கம்

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பழனி முருகன் கோவில் மூடப்பட்டது. மேலும் கும்பாபிஷேக பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது. தற்போது கோவிலின் ராஜகோபுரம், தங்ககோபுரம் ஆகியவற்றில் சிதிலமடைந்து காணப்படும் சிற்பங்களை சீரமைப்பதற்காக கோபுரத்தை சுற்றிலும் பெரிய மரக்கம்புகளால் சாரம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த சாரத்தில் நின்று பணியாளர்கள் சேதமடைந்த சிலைகளை சீரமைப்பது, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து விரைவில் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here