பொதுவுடமையும் பட்டுக்கோட்டையார் பாட்டும்

கைவிட்டுப் பிரிந்த காதலியை கைக்குள் கொண்டு வா என்ற அளவுக்கான காதல் பாடல்களை அதிகமாகக் கொடுத்தவர்தான் பட்டுகோட்டையார் என அழைக்கப்படும் கல்யாணசுந்தரம்.

எனினும் பொதுவுடமைக் கருத்துக்களையும் திரைப்படத்தில் சொல்லியவர்களுள் முக்கிய பங்கு மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு உண்டு.

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணசுந்தரம் தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.

நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.

 

தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர்உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டார்.

விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர் என பாமர மக்களிடையே உழன்றவர் என்பதால் இவரது பாடல்களில் மக்களின் பாடு அதிகமாக வெளிப்பட்டது.

 

அரசியல்வாதி, பாடகர், மேடை நாடக நடிகர், நடனக்காரர் என தொழில் பார்த்து கவிஞர் ஆனார் என்பதால் இவர் எழுத்தில் தனி கவிநயம் உண்டானது.

இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாகசக்தி நாடக சபாவில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, . . கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ..கே. தேவரின் நெருங்கிய நண்பரானார்.

சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியதும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்றுபுரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.

தனிமனித பொதுவுடமை, நாட்டுடமை போன்றவற்றை பாட்டாக்கினார்.

எம்.ஜி.ஆர்- சிவாஜி படங்களில் கல்யாணசுந்தரத்துக்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது. 1956-க்கு பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவர தொடங்கின. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் தத்துவப் பாடல்கள் இடம் பெற்றன. அவை அவரை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றன.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’,  ‘அரசிளங்குமரி’, ‘கலை அரசி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’ போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த ‘மக்களை பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘பதிபக்தி’, ‘தங்கப்பதுமை’, ‘பாகப்பிரிவினை’, ‘புனர் ஜென்மம்’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணபரிசு’ படத்துக்கு எழுதிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

புகழின் உச்சியில் இருந்தபோது 1959-ம் ஆண்டு மத்தியில் கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. பிறகு அவர் வீடு திரும்பினார். மறுபடியும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் 8-10-1959 அன்று மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவருக்கு 29 வயதுதான். சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் உள்ள எண் 15 வீட்டில் குடியிருந்து வந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

 

1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆரிடமிருந்து கவிஞரின் மனைவி ‘பாவேந்தர்’ விருதைப் பெற்றுக் கொண்டார். 

 

1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாஅவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

 

பூவுலகில் இவர் வாழ்ந்தது 29 ஆண்டு காலம் மட்டுமே. இந்த 29 வயதுக்குள் இவர் பட்ட பாடுகளே பாடல்களாக மலர்ந்தன.

 

குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959), அன்புத் திருமணியே (இரத்தினபுரி இளவரசி1959 ), அமுதமே என் அருமைக்கனியே (உலகம் சிரிக்கிறது 1959 ), செங்கோல் நிலைக்கவே – மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959), சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958), அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958), ஆனா ஆவன்னா (அன்பு எங்கே 1958), இந்த மாநிலத்தை பாராய் மகனே (கல்யாணிக்குக் கல்யாணம் 1959), சின்னப்பயலே…சின்னப்பயலே சேதி கேளடா ( அரசிளங்குமரி 1958), தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன் 1958)…

 

திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961), ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே ( குமாரராஜா 1961), உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு 1958),  வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே( பதிபக்தி 1958), ஒரு குறையும் செய்யாம – இருக்கும்( கண் திறந்தது 1959), உருளுது புரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ), ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959)…

 

பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்தன்1962), தாயில்லை தந்தையில்லை ( ஆளுக்கொரு வீடு 1960), சூதாடி மாந்தர்களின் (உலகம் சிரிக்கிறது 1959 ), அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960), ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960), மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )…

 

எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)…

படிப்பு தேவை அதோடு உழைப்பும் (சங்கிலித் தேவன் 1960), சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் (பாண்டித் தேவன் 1959), மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959), விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960), தேனாறு பாயுது செங்கதிரும் (படித்த பெண் 1954), ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959), ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959), கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959), இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே( பதிபக்தி 1958)…

 

நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 ), ஈடற்ற பத்தினியின் – ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 ),  இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958), உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 ), சூழ்ச்சியிலே – குறுக்கு வழியில் (மகாதேவி 1957)…

 

அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 ), உறங்கையிலே – பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957),  இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956), கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957), செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960)…

பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958), கொடுமை – சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959), சின்னச் சின்ன இழை ( புதையல் 1957), டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 ), எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958), என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959)…

 

நாட்டுக்குப் பொருத்தம் நாமே செய்யும் கட்டுப்பண்ணை விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி), வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959), என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961), பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959), உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960), ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958), நன்றி கெட்ட மனிதருக்கு( இரும்புத் திரை 1960)…

 

உலகத்தில் இந்த மரணத்தில் – கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960), உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960), கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960), குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959), தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ), சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960), சும்மா கெடந்த நெலத்த கொத்தி( நாடோடி மன்னன் 1958)…

 

தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957), வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957), பாசத்தால் எனை ஈன்ற( அமுதவல்லி 1959), ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவி( அமுதவல்லி 1959), அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955), சவால் சவாலென்று ( கலைவாணன் 1959), அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960), அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959),  கையில வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே( இரும்புத் திரை 1960), பிஞ்சு மனதில் கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960), ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965), ஆறறிவில் ஓரறிவு அவுட்டு(மகனே கேள் 1965) கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965), ஆட்டம் பொறந்தது (மகனே கேள் 1965), மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965), பருவம் வாடுது ( மகனே கேள் 1965), மணவரையில் சூதாட்டம் ( மகனே கேள் 1965)…

 

என இவர் எழுதிய பொதுவுடமைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

 

 

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

     எத்தனையோ உண்மைகளை
     எழுதிஎழுதி வச்சாங்க
     எல்லாந்தான் படிச்சீங்க
     என்னபண்ணிக் கிழிச்சீங்க?

 

என்று இவர் பாட்டாலேயே சமுதாயத்தை சாட்டை கொண்டு விளாசியிருக்கிறார்.  

 

 

நேர்மைத் திறமும் சமுதாயம் சார்ந்த சிந்தனையும் இருந்ததாலோ என்னவோ இறைவன் இவரை தன் பக்கம் வைத்திருக்கச் செய்த முடிவின் அடிப்படையில், திருமணம் முடித்து ஐந்தே மாதங்களில் அவரது 29ஆவது வயதில் ஈர்த்துக் கொண்டார்.காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தாலும் காலம் தவறாத காலன் இவரை அழித்து விட்டான்.

 

இவர் எழுதிய பாடல்கள் ஒலிபரப்பாகும்போது கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கல்யாணசுந்தரம் தெரிகிறார். பாடல் முடிந்த பிறகு கண்ணைத் திறந்தால் இருண்டு கிடக்கும் கலையுலகம் தெரிகிறது என 1959களில் சிலாகிக்காத மலேசியர்கள் இல்லை.  

 

“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது

அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது

திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது”.

 

பட்டுக்கோட்டையார் எழுதிய இந்த வார்த்தைகளுக்கு இன்று வரை மரணம் கிடையாது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் எப்பேர்ப்பட்ட சிந்தனையாளராக இருந்திருப்பார் என்ற மலைப்பு 

 

மலேசியாவில் மட்டுமல்ல,,, 

தமிழகத்தில் மட்டுமல்ல,,, 

தமிழறிந்த உலக மாந்தர் அனைவருக்குமே உள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here