பொருளாதாரத்திற்குப் புத்துயிர் வெ. 3,500 கோடி செயல் திட்டங்கள்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி பெற வைப்பதற்கும் புத்துயிர் அளிப்பதற்கும் பொருளாதார செயல் திட்டங்களை அரசாங்கம் நேற்று அறிவித்தது.

மொத்தம் 3,500 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த உதவித் திட்டங்கள் நேரடிப் பலனைத் தரும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தொலைக்காட்சி நேரலை உரையில் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவுதல் ஏற்படுத்தி இருக்கும் படுமோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலக நாடுகளோடு மலேசியாவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இத்திட்டம் அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

இந்த 3,500 கோடி வெள்ளி திட்ட வரைவில் மொத்தம் 40 செயல் திட்டங்கள் உள்ளன. இத்தொகையில் 1,000 கோடி வெள்ளியை அரசாங்கம் நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றுக்கிருமி தாக்கத்தால் மார்ச் 18ஆம் தேதி முதல் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு இன்றளவும் அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பெரும்பாலான தொழில்துறைகள் மூடப்பட்டன. ஒரு சில வர்த்தகங்கள், தொழில்துறைகள் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டது.

இந்நிலையில் மூன்று முக்கிய வியூகங்களை முன்வைத்து இந்தப் பொருளாதார மீட்புத் திட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
முதன்மையாக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து வலுப்படுத்துவது. அடுத்து வர்த்தகங்களை வேகப்படுத்துதல். மூன்றாவதாக பொருளாதார விரிவாக்கம் ஆகியவை அந்த மூன்று அம்சங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here