ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
சமீப நாட்களாக ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பான செய்திகளே அதிகம் வெளியாகி வருகிறது. இந்த சூழலில் புதிய வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சமூக ஆர்வலர் என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ளார். இவர் ஜெயலலிதா உயிரிழந்த போதிருந்தே, இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ஜெயலலிதா ஒரு குற்றவாளி எனக் கூறி, அவருக்கு அரசு மரியாதை, அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது கூடாது என டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபாவை நேரடி வாரிசாக அறிவித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற செல்ல பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.