ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நண்பர்கள் இணைந்து கொண்டாட்டம் நடத்தியுள்ளனர். அவ்வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார் 10 பேரை கைது செய்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கொடுத்த புகாரின் பேரில் டாங் வாங்கி காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். அதில் 1 இந்திய ஆடவரும் 4 மலாய்க்கார ஆண்களும் 5 மலாய்க்கார பெண்களும் கைது செய்யப்பட்டனர். அதோடு அவ்வீட்டில் இருந்த மதுபானங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர் என்று வங்சா மாஜூ மாவட்ட காவல் துறை தலைவர் ராஜாப் அஹாட் பின் இஸ்மாயில் தெரிவித்தார்.
இக்கொண்டாட்டத்தின் ஏற்பாட்டாளர் 250 வெள்ளிக்கு அவ்வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய குற்றச்சாட்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் போலீஸார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிந்தது. மக்கள் எப்போதும் போலீஸாருடன் இணைந்து செயல்பட்டால் குற்றச் செயல்களை குறைக்க முடியும் என ராஜாப் அஹாட் கேட்டு கொண்டார்.