பசிக்கு உணவு கேட்ட சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை

மனநிலை பாதிக்கப்பட்ட தாய்க்கு உணவு வாங்க உதவி கேட்டுச் சென்ற 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆறு முதியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தாய் மன நலம் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறுமியின் தந்தை வெளியூரில் தாம் வேலை செய்துவந்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார்.

வீட்டில் இருக்கும் வறுமை, பசிக்கு யாராவது உதவமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு, அச்சிறுமி அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்டு, அவர்கள் கொடுக்கும் சிறு, சிறு வேலைகளை செய்து அதற்கு அவர்கள் தரும் பணம், உணவு பொருட்களைக் கொண்டு தாயையும் காப்பற்றிய வந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுமி தனது பக்கத்து வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் அதே தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை கண்ட பக்கத்து வீட்டு பெண் அந்த சிறுவனை பிடித்து கண்டித்து அனுப்பிவிட்டார்.

பின்னர் சிறுமியிடம் அந்த பெண் விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தான் செல்லும் வீடுகளில் உள்ளவர்கள் தனக்கு உதவி செய்வதோடு பாலியல் தொல்லையிலும் ஈடுபடுவதாக, கூறியுள்ளார். ஒரு மளிகை கடைக்காரர் எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பதையும் அந்தச் சிறுமி செய்து காட்டியுள்ளார். இதனை விடியோவாக பதிவு செய்த அந்தப் பெண், சிறுமியின் அப்பாவிடம் இது பற்றிக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி பேசும் வீடியோவுடன் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார் தந்தை. இந்தப் புகாரை குறித்துவிசாரிக்க குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. துரிதமாக களத்தில் இறங்கிய போலீஸ், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.

குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறார் உட்பட ஆறு பேரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பேசிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் “இந்த வழக்கில் சிறுமி அவரது குடும்பத்தினரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி உதவி கேட்க செல்லும் போது, பணம் கொடுப்பதோடு சிறுமிக்கு பலர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது” என்று கூறினார்.

75 வயதான மளிகைக் கடைக்காரர், போட்டோ ஸ்டுடியோ நடத்தும் ஒருவர், இரு சிறுவர்கள் உள்பட இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் அனைவரும் நாகர்கோயில் பெண்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களில் நால்வர் மாவட்டச் சிறையிலும் இருவர் நெல்லை சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

வயிற்றுப் பசிக்கு உதவி கேட்டுச் சென்ற தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பேசுவதாகத் தோன்றும் வீடியோ பல வாட்ஸாப் குழுக்களில் பகிர்ந்து, அந்த சிறுமியின் துன்பத்தில் இன்பம் கண்ட மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுமி பேசியதாகத் தோன்றும் வீடியோ, அவரது புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here