சீர்காழியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. நல்லவேளையாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர். இதனால் பாதிப்பு ஏற்படவில்லை.
சீர்காழி பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவது போல் இருட்டியது. பின்னர் பலத்த காற்று வீசியது. சாலையில் புழுதி கிளம்பி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பலத்த காற்றின் காரணமாக கடைகளில் வைக்கப்பட்டிருந்த வெளிப்புற டிஜிட்டல் பெயர் பலகைகள் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டன.
இதேபோல் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்களும் சேதமடைந்து முறிந்து விழுந்தன. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
முன்னதாக, கொள்ளிடம் மாங்கணாம்பட்டு, சரஸ்வதிவிளாகம், மாதிரவேளூர், கீரங்குடி, பாலுரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. கடந்த பல நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
ஆனால் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் செங்கல் சூளை நடத்தி வருபவர்களுக்கு திடீரென பெய்த மழையால் சுடப்படாத பச்சைக் கல்கள் நனைந்து வீணாகியது.