ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜிஎல்சி பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மக்கிப்போன கிளைகளில் தொங்குவதைப்போல் உள்ளது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் அரங்சாங்கம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜிஎல்சி பதவிகளைக் கொடுத்துள்ளது.
இது எதைக் காட்டுகிறது என்றால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பலவீனமாக இருக்கிறது என்பதைத்தான் என்று கூறினார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜிஎல்சி பதவியில் அமர்த்துவது சிறந்த கலாச்சாரமாகத் தெரியவில்லை. இது கவலைக்குரியதாகும்.
இப்போது பாருங்கள், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜிஎல்சி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் சாடினார். அரசியல்வாதிகள் இப்போது வாங்கும் விற்கும் பொருட்களாக மாறிவிட்டனர். இவர்கள் கொள்கையைப் பின்பற்றுவது இல்லை. யாருக்குக் கடன் இருக்கிறது, யாருக்கு அமைச்சர் பதவி வேண்டும், யாருக்கு ஜிஎல்சி பதவி வேண்டும், அவர்கள் எல்லாம் இப்போது இந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்றார்.
இது சரியான கலாச்சாரம் அல்ல, நல்லதும் அல்ல. ஆளும் கூட்டணிக் கட்சி பலவீனமாக இருக்கிறது. அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜிஎல்சி பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மக்கிப்போன கிளையில் தொங்குவதைப்போல் உள்ளது என்று அவர் கிண்டலடித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இப்போது பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்களைக் கவரும் முயற்சியில் உள்ளது. இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் போகமாட்டார்கள். எங்களிடம் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசுவாசமானவர்கள். கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அவர்கள் தோற்றுப்போனாலும் எதிலும் பின்வாங்காமல் போராடக் கூடியவர்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.