இந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரசால் ஆபத்து அதிகம்

கொரோனா வைரசின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் குறைவான அறிகுறி உள்ளது? சிலர் ஏன் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்? இதற்கு விடை அந்த நபரின் ரத்த வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு நபர் வைரசால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் வகை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற உண்மையை சமீபத்திய ஆய்வுகள் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன. 23andMe என்ற மரபணு-சோதனை நிறுவனம் சமீபத்தில், கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஓ வகை ரத்தம் (ஓ பாசிட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ்) உள்ளவர்கள் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளனர். மற்ற ரத்த வகைகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஓ வகை ரத்தம் வைரசிலிருந்து பாதுகாப்பாக தோன்றுகிறது என அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிற ரத்த வகைகளைக் கொண்ட நபர்களை விட, ஓ ரத்த வகை கொண்ட நபர்களுக்கு பாதிப்பு 9-18 சதவீதம் குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நோயின் தீவிரம் மற்றும் பாதிப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளும், ரத்த வகை முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளன. இதன்மூலம் ஏ வகை ரத்தம் உள்ளவர்களை கொரோனா தாக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன், உயிருக்கும் ஆபத்து நேரிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ் மற்றும் ஏபி நெகட்டிவ் ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு கொரோனா வைரசால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும், ஓ வகையில் பாதிப்பு குறைவு என்றும் சீன ஆய்வாளர்களும் கண்டறிந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here