பேரிகை அருகே மணமகன் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த குடிசாதனப்பள்ளி அருகே உள்ள தொரப்பள்ளியை சேர்ந்தவர் ராமு (வயது 23). விவசாயியான இவருக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழை மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் இருந்த புங்கன் மரத்தில், ராமு தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண வேலைகள் நடந்து வந்த நிலையில், ராமுவிற்கு திருமண செலவிற்காக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ராமு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here