விஜய், அஜித், சூர்யாவின் மெய்காப்பாளர் மரணம்!

விஜய், அஜித் சூர்யா உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுக்கு மெய்காப்பாளராக இருந்தவர் திடீரென மரணமடைந்தார். பிரபல ஹீரோக்கள், ஹீரோயின்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது ரசிகர்களின் அன்பு தொல்லையில் சிக்குவார்கள்.

மெய்காப்பாளர் இல்லாமல், சில ஹீரோயின்கள் பல்வேறு இடங்களில் ரசிகர்களிடம் சிக்கி, தொல்லைக்கு உள்ளான சம்பவங்கள் பல நடந்துள்ளன.

மெய்காப்பாளர்

கை கொடுப்பது, முத்தம் கொடுப்பது, கன்னத்தைத் தடவுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களிடம் இருந்து, ஹீரோ, ஹீரோயின்களை காப்பதற்கு மெய்காப்பாளர் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள், ரசிகர்கள் நெருங்கிவிடாதபடி பாதுகாப்பாக இருப்பார்கள். அப்படி பல ஹீரோக்களுக்கு மெய்காப்பாளராக பணியாற்றியவர், மரநல்லூர் தாஸ் என்ற கிறிஸ்துதாஸ்.

முதன்முதலாக

மலையாள சினிமாவில் முதன்முதலில் தனியார் செக்யூரிட்டி குழு என்ற கான்செப்டை கொண்டு வந்து, மோகன்லால் படத்துக்கு முதன்முதலாக பணியாற்றினார். பின்னர் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பணியாற்றிய அவர், பிறகு அவர்களுக்கான மெய்காப்பாளர் பணியாற்றினார். இதற்கு வரவேற்பு கிடைக்கவே, தாஸை பெரும்பாலான நடிகர், நடிகைகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.

படப்பிடிப்பு தளங்கள்

இதையடுத்து நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு மெய்காப்பாளராக இருந்துள்ளார். இவர் தனது குழுவுடன் இந்த ஹீரோக்களின் படப்பிடிப்பு தளங்களுக்கும் பாதுகாப்பாளராக இருந்துள்ளார். பல ஹீரோக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட தாஸ் அருகில் இருந்தால், நடிகர், நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பு என்றே கருதுவார்கள்.

மஞ்சள் காமாலை

இந்நிலையில், இவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நோய் முற்றவே, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 47. இந்தச் செய்தி சினிமா பிரபலங்களுக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர்கள் இரங்கல்

அவர்கள், தாஸ் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், துல்கர் சல்மான், மம்மூட்டி உள்ளிட்டோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here