யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது

பண்ருட்டி அருகே யூ-டியூப் பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் யூ-டியூப்பை பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் 3 வாலிபர்கள் கையில் கற்கள் மற்றும் துப்பாக்கி போன்ற வடிவமைப்பில் இருந்த பிளாஸ்டிக் குழாயுடன் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காடாம்புலியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த தனபால் மகன் சிவப்பிரகாசம் (வயது 24), ஆனந்தன் மகன் வினோத்குமார்(21), ரவி மகன் வெற்றிவேல்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரும் முயல் மற்றும் அணில் வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி 3 பேரும் கடந்த சில நாட்களாக யூ-டியூப்பில் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் வீடியோக்களை பலமுறை பார்த்து வந்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களில் உள்ளபடி நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதற்கான பொருட்கள் ஏதும் கிடைக்காததால், பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக 3 பேரும் சேர்ந்து சிறிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்களை வாங்கியுள்ளனர். பின்னர் அதனை பயன்படுத்தி துப்பாக்கி போன்று வடிவமைத்துள்ளனர். மேலும் அதில் ஒயர்களை இணைத்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் அணில் மற்றும் குருவிகளை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பிளாஸ்டிக் குழாயால் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here