தங்கள் சொந்த நாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு அஞ்சி அகதிகளாக அடைக்கலம் தேடி வரும் மனிதர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிபடுத்துவது அனைவரின் மனிதாபிமான கடமையாகும்.
நிலையான வாழ்க்கையை கொண்டுள்ள மனிதர்கள் அகதிகளாக அடைக்கலம் தேடி வருபவர்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க முடியும். அந்த பொறுப்பு எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது என்று தேசிய மனித உரிமை ஆணையம் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அகதிகள் மீது தவறான கருத்தை முன்வைத்து, எதிர்மறை கருத்துக்களை உருவாக்க வேண்டாம். சொந்த நாட்டில் பல இன்னல்களை அனுபவித்த பின்னர்தான் அகதிகளாக ஆதரவு தேடி வருகிறார்கள். அவர்களையும் மனித சமூகத்தில் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்ள வேண்டியது அனைவரது கடமையாகும்.
சில வேளைகளில் அகதிகளுக்கு எதிராக நடத்தப்படும் நேரடி மறைமுக தாக்குதல் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது. அண்மையில் குடிநுழைவுத் துறை இலக்கா அகதிகளுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி கைது நடவடிக்கைகள் அகதிகள் மீது பொது மக்களுக்கு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியது.
கோவிட் எல்லாம் நிலையிலான மக்களுக்கும் பதற்றத்தையும் சிரமங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வேளையில் எல்லைகள் கடந்து, தகுதிகள் கடந்து, எல்லா மனிதர்களையும் அரவணைத்து, அவர்களது நல்வாழ்வை உறுதிசெய்வது அனைவரது கடமையாகும் என்று இன்று ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் மலேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியது.