தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது மக்களை சிரமப்படுத்துவதற்கு அல்ல; கொரோனாவை தடுக்கவே. கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தனக்கு கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் அன்பழகனே கூறிவிட்டார். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.