பல மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் ஜோகூரில் 5 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 288 குடும்பங்களைச் சேர்ந்த 1,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூவார், பத்து பஹாட், தங்காக், குளுவாங், பொந்தியான் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் 18 துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார சுற்றுச் சூழல் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் தெரிவித்தார்.
பொந்தியான் மாவட்டத்தில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 குடும்பங்களைச் சேர்ந்த 349 பேர் 4 பள்ளிகளில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து பத்து பஹாட்டில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 343 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூவாரில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர் 5 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குளுவாங்கில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 4 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்காக்கில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரை இரு பள்ளிகளில் தங்க வைத்திருப்பதாக வித்யானந்தன் கூறினார்.