விரைவில் இன்னோர் அமைச்சரவை மாற்றம்? துணை அமைச்சர் பதவி இழப்பார்?

 

பி.ஆர்.ராஜன்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில்  இன்னோர் அமைச்சரவை மாற்றத்தை அறிவிப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இதில் ஒரு துணை அமைச்சர் கழற்றிவிடப்படலாம். அதே சமயத்தில் தமிழ் பேசக்கூடிய ஒருவர் முழு அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், பேச்சுகள் போன்றவை அவர் சார்ந்திருக்கும்  கட்சியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும்  நீக்கப்பட வேண்டும் எனக் கோரி கட்சியில் செல்வாக்குமிக்க ஒரு தரப்பு ஆதரவு திரட்டி வருகிறது என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தான் சார்ந்திருக்கும்  அமைச்சின் உயர் அதிகாரிகளிடம், பணியாளர்களிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் பிரதமரிடம் புகாராகச் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் அந்த வட்டாரம் கூறியது.

சக கட்சித் தலைவர்கள் மீது அபாண்டமான குற்றங்களைச் சுமத்தியது, அக்கப்போராகப் பேசியது, மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது போன்ற கேடான செயல்கள் இந்தத் துணை அமைச்சருக்கு பெரும் வினையாக முடிந்திருப்பதை அந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

அதிகாரம் என்பது கத்துவதற்கும் மிரட்டுவதற்கும் கிடைத்திருக்கும் ஒரு சாவி அல்ல. பதவி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு வானுக்கும் பூமிக்கும் எகிறியவர்கள் எல்லாம் சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டதையும் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

அதிகாரம் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் கொண்டு, அதிகாரம் வழங்கிய மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் செழிப்பதற்கான  கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 ஏப்ரல் 4ஆம்  தேதி வியாழக்கிழமை பிகேஆர் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தியிருக்கிறார்.

பிகேஆர் கட்சியின் 25ஆம் ஆண்டு விழாவில் கட்சி உறுப்பினர்களுக்கு  ஆற்றிய உரையில் அக்கட்சியின் தேசியத் தலைவருமான அவர் இதனை அறிவுறுத்தியிருக்கிறார்.

அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒரு நம்பிக்கையும் வாய்ப்பும் ஆகும். மாறாக, அதனை ஒரு சலுகையாகக் கருதலாகாது.

கொள்கைகள் உருவாக்கத்தில்  மக்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும்  முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

பிரதமரின் நினைவுறுத்தல் இவ்வாறு இருக்க சொந்த இனத்தவரை நம்பாமல் அடுத்த இனத்தை நம்பி மோசம் போனது யார் தப்பு என்று சொந்தக் கட்சிக்காரர்களே கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் போட்டியிடும்  தகுதியை இவர் பெறுவாரா? எதிர்ப்பலைகளை சமாளிப்பாரா என்பது இப்போது எழுந்திருக்கும் மிகப் பெரிய ஒரு கேள்வியாகும்.

வந்த வழி சரியாக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான்  மக்கள் நலப் பணிகளின் அர்த்தம் புரிந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here