கடந்த 2016 ஏப்ரல் 22 முதல் நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பதவியேற்று சிறந்த முறையில் சேவையாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் பதவி தவணைக்காலம் நாளை திங்கட்கிழமை ஜூன் 22ஆம் தேதியுடன் திங்கட்கிழமையுடன் நிறைவு பெறுகின்றது.
நாட்டின் பேரரசர், பிரதமர் பொறுப்புகளுக்கு அடுத்த நிலையில் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் மேலவைத் தலைவர் பதவியை அலங்கரித்து, தேசிய மற்றும் உலக ரீதியில் முத்திரைகள் பதித்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
கோத்தாராஜா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும் 2004 முதல் 2008 வரை பதவிகள் வகித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், 2014ஆம் ஆண்டு செனட்டராக நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவைத் தலைவராக அன்னார் நியமனம் பெற்றது மஇகாவிற்கும் இந்திய சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட மாபெரும் அங்கீகாரமாகும்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மூன்று பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் பாரிசான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் என மூன்று வெவ்வேறு அரசாங்கங்களின் கீழும், டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துன் டாக்ட் மகாதீர் முகமது, டான்ஸ்ரீ முஹிடின் யாசின் என மூன்று பிரதமர்களின் தலைமைத்துவத்திலும் பணியாற்றிய பெருமையைப் பெறுகின்றார்.
அரசாங்கம் மாறினாலும் வழங்கப்பட்ட கடமையினைச் செவ்வனே செய்து அனைவரின் அபிமானத்தையும் ஈர்த்தார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.