சீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு?

எல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்றொருபுறம் சூடுபிடித்திருக்கும் பிரசாரத்தைப் பயன்படுத்தி சீனத் தயாரிப்பு அல்லாத செல்போன் நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் சந்தையை வலுப்படுத்திக் கொள்ளுமா?

செல்லிடப் பேசி சந்தையில் சீனப் போட்டியினால் இழந்துவிட்ட பங்கை மீண்டும் கைப்பற்ற சீனத் தயாரிப்புகள் அல்லாத சாம்சங், ஆப்பிள், நோக்கியா, அசுஸ் போன்ற நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு எனலாம்.

சீன செல்லிடப்பேசிகளுடன் வெறுமனே போட்டி என்றில்லாமல் அதிகளவு வசதிகளுடனும், போட்டி போடக் கூடிய அளவுக்கு விலையில் குறைவாகவும் இருக்க வேண்டியதும் அவசியம் என தொழிற்துறையினர் கருதுகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சந்தையில், ஏ வரிசை, எம் வரிசைகளின் அறிமுகத்தின் மூலம் சாம்சங் செல்போன்கள் பெருமளவுக்குக் குவிந்தன. பல்வேறு விலைகளில் சந்தைக்கு வந்ததால் விற்பனையில் சாம்சங் மூன்றாமிடத்தில் இருந்தது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங், கடந்த வாரத்தில் புகழ்பெற்ற தன்னுடைய கேலக்ஸி நோட் 10 லைட் செல்லிடப் பேசியின் விலையை ரூ. 4 ஆயிரம் குறைத்தது, இப்போது விலை ரூ. 37,999.

இந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை – கேலக்ஸி எம்11, கேலக்ஸி எம்01 – ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வெளியிட்டது.

மற்றொருபுறம் ஆப்பிள் நிறுவனமும் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுடன் இணைந்து விலை குறைத்தும் விற்பனையில் இறங்கியிருக்கிறது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் ஆகக் குறைந்த விலையில் ஆனால் ஆற்றல் மிக்க ஐபோன் எஸ்இ போனை இந்தியாவில் ரூ. 38,900-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களில் ஒருதரப்பினரிடம் நிலவும் சீன வெறுப்புணர்வைப் பயன்படுத்திக் கொள்ள, பிற போட்டி செல்போன் நிறுவனங்கள் எவ்வாறு தயாராகின்றன என்பதை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், செல்லிடப்பேசி சந்தையில் பெரும்பங்கை வைத்திருக்கும் ஸியோமி நிறுவனமோ, வேறெந்த நிறுவனத்தையும்விட தாங்கள்தான் இந்தியமயமாக இருக்கிறோம் என்று குறிப்பிடுகிறது.

“ஸியோமியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவில்தான் இருக்கிறது, இங்கே 50 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். வழிநடத்தும் தலைமைக் குழுவினரும் இந்தியர்களே. இந்தியாவில்தான் வரியும் கட்டுகிறோம்” என்று நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனு குமார் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here