முடிவுக்கு வருகிறதா லடாக் போர்?

மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற தணிப்பு பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணிகளின்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பல மணி நேரம் நீடித்த இந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கும் 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவின் இருபெரும் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் சீனா மீண்டும் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்க படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இருதரப்பும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் மோதல் நடந்த மறுநாளே இருதரப்பு ராணுவத்திலும் மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தது. 3 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. லடாக் எல்லையில் அமைந்துள்ள மோல்டோ எல்லைப்படை சந்திப்பு முனையின் சீன பகுதிக்குள் காலை 11.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை என 11 மணி நேரம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதில் இந்தியா தரப்பில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் 14ஆவது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் மிலிட்டரி மாவட்ட கமாண்டர் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

லடாக்கில் சீனா ஊடுருவலுக்குப்பின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த              2 ஆவது கட்டப் பேச்சுவார்தை இதுவாகும். மேலும் இருதரப்பிலும் உயிரிழப்பை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

இது குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சிறந்த, நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில் நடந்தது. பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கி கொள்ள வேண்டும் என்ற கருத்து இரு தரப்பிலும் இருந்தது. எனவே அதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த படை விலக்கும் நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்படும்.

இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும். அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் இருதரப்பு படைகளும் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்வாங்கி செல்லும். இந்த தொலைவு ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறாக இருக்கும்.

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டு, ஏராளமான வீரர்கள் காயமடைந்த விவகாரத்தை இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பில் எழுப்பப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய இருதரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் உறுதியேற்று இருப்பதாக சீனாவும் குறிப்பிட்டு உள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

லடாக்கில் பதற்றத்தை குறைப்பதற்காக ஜூன் 22-ந்தேதி (நேற்று முன்தினம்) இருதரப்பிலும் கமாண்டர் மட்டத்திலான 2-வது பேச்சுவார்த்தை நடந்தது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின் கமாண்டர் மட்டத்தில் நடந்த முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் விரும்பியதன் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

கமாண்டர் மட்டத்தில் நடந்த முதல் கூட்டத்தில் (ஜூன் 6-ந்தேதி) எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் இந்த முக்கிய பிரச்சனை குறித்து இரு தரப்பும் தங்கள் கருத்துகளை பரிமாறின. எல்லையில் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும் எல்லையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இணைந்து உழைக்கவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

லடாக் எல்லையில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்க ஒப்புக்கொண்டிருப்பதாக இந்தியா கூறியிருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த லிஜியான், ‘இந்த விவகாரம் குறித்து இருதரப்பிலும் கள வீரர்கள் இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதைப்போல கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் எவ்வளவு வீரர்கள் இறந்தனர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இந்த மோதல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இந்தியாவும் சீனாவும் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. ஊடகங்களில் நீங்கள் பார்த்ததை (பலி எண்ணிக்கை) பொறுத்தவரை, உதாரணத்துக்கு சீனாவில் 40 பேர் இறந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இது பொய்யான செய்தி என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்  என்று தெரிவித்தார்.

சீனா தரப்பு உயிரிழப்பு குறித்து முதல் முறையாக அந்தநாடு கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டு இருப்பதன் மூலம் எல்லையில் நிலவும் போர் பதற்றம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here