பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) ஜூன் 10 முதல் ஜூன் 26 வரை திரையிடப்பட்ட 6,155 நபர்களில் 34 பேர் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டிருப்பதாக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். 6,121 பேருக்கு அத்தொற்று இல்லையென்றாலும் தற்போது கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் சனிக்கிழமை (ஜூன் 27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பிலிப்பைன்ஸ், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, இந்தோனேசியா, ஹாங்காங், கம்போடியா, கத்தார், பாகிஸ்தான் மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து 425 மலேசியர்கள் KLIA மற்றும் KLIA2 வழியாக நாடு திரும்பியுள்ளதாக தற்காப்பு அமைச்சரான அவர் மேலும் தெரிவித்தார். இந்த திரும்பி வந்தவர்களில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், 422 பேர் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு உத்தரவை (எம்.சி.ஓ) மீறியதற்காக 53 பேரை போலீசார் தடுத்து வைத்திருப்பதாக இஸ்மாயில் சப்ரி கூறினார். இவர்களில், எட்டு பேர் தடுப்பு காவலில் இருப்பதாகவும் மீதமுள்ள 45 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.