ருக்குன் நெகாரா, மலேசியக் கோட்பாடு

1970 ஆம் ஆண்டு என்றால் முதலில் ஞாபகம் வருவது நாட்டின் சுதந்திர தினமாகத்தான் இருக்கும். வேறென்ன இருக்கிறது என்று கொஞ்சம் யோசித்தால் ஒன்று ஞாபகம் வரும், ஓ.. என்ற ஆச்சரியம் கூடவே வரும். முகம் மலரும். ஆனந்தம் தெரியும்.

இன்றைய நிலையில் தேசிய கோட்பாடு அல்லது ருக்குன் நெகாரா என்பதெல்லாம் மறந்து போனதாகவே மாறிவிட்டது, அதுதான் உண்மை. ருக்குன் நெகாரா என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கின்றனர். பெரியவர்களுக்கு அந்த வார்த்தை தெரிகிறது. ஆனால், அதன் அர்த்தம், அதன் தன்மை என்ன வென்றே தெரியவில்லை. மாணவர்களுக்கு அறவே தெரியவில்லை!

இப்படி ஆவதற்கு யார் காரணம்?

அரசு இதற்கான நினைவுறுத்தலைச்  செய்யவில்லை என்பதுதான் உண்மையாக இருக்குமோ?

இன்றைய மலேசிய மக்கள் மக்களாகத் தெரிகிறார்கள் என்றால் அதில் ருக்குன் நெகாராவின் பங்கு 90 விழுக்காடு இருக்கிறது என்பதற்கு மறுப்பு இருக்காது.

தனி இனச் சிந்தனை எவருக்கும் எழவில்லை அப்போது. அனைவரும் நாட்டின் உயர்நிலை பற்றியே சிந்தித்தனர். அதுபற்றியே பேசினர்.  அதனால் ஒற்றுமை வளர்ந்தது. ஐந்து நெறி கோட்பாடுகளை மக்கள் உயிராக நினைத்தனர்.

நாட்டின் உயர்ந்த கொள்கைகளை மக்களின் மனத்தில் வேரூன்றச்செய்த ருக்குன் நெகாரா கோட்பாட்டின் முதல் கோட்பாடே இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பதுதான்.

பிள்ளைகளின் மனத்தில் இறை உணர்வை விதைக்க ருக்குன் நெகாராவைவிட சிறந்த ஒன்று இருக்க முடியாது.

தொடர்ந்து அரச விசுவாசம் குறித்தும் கூறுகிறது. கூறப்பட்ட ஐந்து கோட்பாடுகளுக்குள் அனைத்துமே இருக்கிறது. ஆனால், இன்று அந்த நெறிகளும் சோபை இழந்து கிடக்கிறது என்ற குறிப்பைத் தருகிறார் மலேசிய மக்கள் ஒற்றுமை அறவாரியத்தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தாய் .

ருக்குன் நெகாரா மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். நாட்டின் சிறந்த மலர்ச்சிக்கும் மக்களின் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் ருக்குன் நெகாராவைவிட சிறந்த கோட்பாடு இருக்க முடியாது. ஐந்து விரல்களை மடக்கிச் சாதிப்பதுபோல் ருக்குன் நெகாரா விளங்கி வந்திருக்கிறது.

வரும் ஆகஸ்டு மாதம் நாட்டின் சுதந்திர தினம்.  அதோடு ருக்குன் நெகாராவுக்கும் 50ஆம் ஆண்டு நிறைவு. இந்த இரண்டையும் கண்களாக மதிக்கலாமே! கொண்டாடலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here