விழுப்புரம் மாவட்டத்தில் 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நீர்ப்பெருந்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து குழந்தையுடன் 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் 26ஆம் தேதி குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் இருமலுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதில் பதறிப்போன பெற்றோர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அன்றைய தினமே குழந்தைக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அந்த குழந்தை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், மூச்சுத் திணறலும் இருமலும் குறையாத நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்தச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காததால் மூச்சுத் திணறல் அதிகமாகி குழந்தை நேற்று இரவு உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம்.
சிறுநீரகம், கல்லீரல், இதய நோய்கள் உள்ள வயதானவர்கள் மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள் என்று கூறப்பட்டுவந்த நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்.