பிரதமர் வரிசையில் 9ஆவது எண் யாருக்குப் போய்ச்சேரும் ? இது, ஓட்டமா, நடையா என்பதல்ல, மெதுநடைஎன்றாலும் 9 ஆவதாக வருவது யார் என்பதே முக்கியம். இந்த ஓட்டத்திலும் டத்தோஶ்ரீ அனுவார் பிந்தங்கி விடுவார் என்றெ அறிகுறி தோன்றுகிறது.
அரசியலில் ஏதும் நடக்கலாம். எப்படியும் மாறலாம். இதற்கெல்லாம் ஐந்தாண்டுகள் வரை தேவைப்படாது. 24 மணி நேரம் தாக்குப்பிடித்தாலே நல்ல அரசியல்தானா என்பது தெரிந்துவிடும்.
இன்றைய அரசியல் சித்து விளையாட்டில் மாயா ஜால வித்தையை துன் டாக்டர் நவீன நாரதராக இருந்து செயல்படுத்துகிறார் என்பதாகவே அனைத்து செயல்களும் இருக்கின்றன. இவரால் நன்மைகளை விட நன்மையற்றவைகளே அதிகமாகிவருகின்றன. இது, அனைவராலும் உணரப்படுகிறது. அரசியலிலும் அப்படித்தான் தோன்றுகிறது.
துன் டாக்டர் மகாதீர் முகமது நல்லவரா? கெட்டவரா? அரசியல் தெரியாதவர்கள் கூட இப்போதெல்லாம் மிகச்சரியான பதிலைத் தந்துவிடுவார்கள்.
கோவிட் வருவதற்குமுன்பே டத்தோஶ்ரீ அனுவார் 8 ஆவது வின்னராக வந்திருக்க வேண்டும். அப்பதவி அவருக்கு எட்டவே இல்லை. ஏன் வரமுடியவில்லை? வரக்கூடாது என்ற எண்ணமா? காலச்சுழலில் காணாமல் போய்விடட்டும் என்ற தப்புக்கணக்கா? தன்மீது பழியில்லாமல் காய் நகர்த்துகிறாரா துன்?
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வரவே கூடாது என்பதுதான் கொள்கையா? மலேசிய அரசியல் நிலைத்தன்மை யாரால் அழிந்துகொண்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத்தெரிய ஆரம்பித்துவிட்டதே! இதில் கோவிட் -19 காலம் நல்லதையே செய்து உணர்த்திக்கொண்டிருக்கிறது.
அரசியல் தொற்று அருகிலேயே இருப்பது உணரப்பட்டுவிட்டது. எப்படி?
இப்போது, துன் டாக்டர் மகாதீர் சபா வாரிசான் குளத்தில் கல்லெறிந்திருக்கிறார். அதன் தலைவரே 9 ஆவது என்று துருப்புச்சீட்டையும் இறக்கியிருக்கிறார்.
அரசியல் சொக்கட்டானில் டத்தோஶ்ரீ அன்வாருக்கு 9 ஆவதும் இல்லை என்று இன்னும் முடிவாகவில்லையென்றாலும், சபா மாநிலத்துக்குப் பிரதமர் பதவி என்பதால், டத்தோஶ்ரீ ஷாஃபி அப்டால் சபா கட்சிகளால் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறார் என்பதே முக்கியம் . இவர் பிரதமரானால் சபா மாநிலம் விழாக்கோலம் காணும். புதிய வரலாறு திரும்பும்.
இந்த வாய்ப்பை சபா மக்கள் மறந்தும் நழுவ விடமாட்டார்கள். அதற்காக எதையும் செய்ய முன்வருவார்கள் . இதில் 9 ஆவது என்ற எழுத்து யார் தலையெழுத்தாக இருக்கும்? என்பதைப் பொறுத்துதான் கணிக்கவேண்டும்.











