பைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் அப்டேட் தகவல்கள் திருடப்படுவதை எச்சரிக்க துவங்கிய நிலையில், டிக்டாக் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஐஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளில், க்ளிப் போர்டில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படுவதை எச்சரிக்கை செய்யும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இதுபோன்று பயனர் விவரங்களை பிரபல செயலியான டிக்டாக் சேகரிப்பது கண்டறியப்பட்ட நிலையில், பல பயனர்கள் விவகாரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கினர்.
‘டிக்டாக் செயலியில் இந்த பிழை, தொடர்ச்சியான மற்றும் ஸ்பேம் நடவடிக்கைகளை கண்டறியும் அம்சத்தால் ஏற்பட்டுவிட்டது. இந்த பிழையை சரி செய்வதற்கான அப்டேட்டினை ஏற்கனவே வழங்கிவிட்டோம்’ என டிக்டாக் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்டில் டிக்டாக் மட்டும் சிக்கவில்லை. அக்யூவெதர், கால் ஆஃப் டியூட்டி மொபைல் மற்றும் கூகுள் நியூஸ் போன்ற செயலிகளும் ஐஒஎஸ் க்ளிப் போர்டு விவரங்களை சேகரித்தது அம்பலமாகி இருக்கிறது.