மாணவர்கள் மத்தியில் சிந்தனை உருமாற்றத்தை ஏற்படுத்துவதே அவசியம் – கணேசன் ஸ்ரீரங்கம்

சாதாரண ஒரு கல்லை செதுக்க செதுக்க தான் அது சிறபம் ஆகும். அதே போல தான் மாணவர்களும். சரியான முறையில் அவர்களை செதுக்கினால் தான் எதிர்காலத்தில் சிறந்த சிற்பமாக அவர்கள் உருமாற முடியும்.

மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்கிறது என்றால் அவற்றை களையெடுக்க முறையான பாதை தான் அவசியமே தவிர அவர்களை கைக்கழுவி விடுவது அல்ல.

மலேசிய தமிழ்ப்பள்ளி உருமாற்றுத் திட்ட இயக்கம் (திஎஸ்திபி) ஒன்றின் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அதன் தோற்றுநர் கணேசன் ஸ்ரீரங்கம் தெரிவித்தார்.

மனிதவள நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது இயக்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களை நெறிப் படுத்தலாம் என்ற எண்ணம் தமக்கு வந்ததாக அவர் கூறினார்.

கல்வியில் பின் தங்கிய, சுய தன்னம்பிக்கை குறைவாக இருந்த மாணவர்களை அடையாளம் காண்பதையே முதல் முயற்சியாக கொண்டிருந்தோம்.

மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டல் எந்தளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு சுய தன்னம்பிக்கை, சிந்தனை உருமாற்றம் என்பது மிகவும் அவசியமாகும். அவற்றை மாணவர்களுக்கு உணர்த்துவதையே முதன்மை பணியாக செய்யத் தொடங்கினோம்.

முதன் முதலாக 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டு திஎஸ்திபி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுமையிலும் 200 பேர் இதில் உறுப்பினர்களாகவும் தன்னார்வாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர்.

திஎஸ்திபி இதுவரை 148 பள்ளிகளுடன் இணைந்து பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. குறிப்பாக யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிக்காட்டும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.

மாணவர்களை கல்வி ரீதியில் மட்டும் முறைபடுத்துவது தவிர்த்து அவர்களை சுய தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் சிந்தனை உருமாற்றம் கொண்டவர்களாகவும் உருமாற்றும் பணிகளையும் திஎஸ்திபி செய்து வருகிறது.

குடும்ப பிரச்சினைகளின் காரணமாக பல மாணவர்கள் முறையான வழிக்காட்டல் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். இப்படி பாதிக்கப்பட்ட பல பிள்ளைகள் அவர்களின் பெற்றோர், ஆசியர்கள் என யாரிடமும் பொதுவாக பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. ஆனால் திஎஸ்திபி நடத்திய பல நிகழ்ச்சிகளில் வாய்த் திறந்து பேசுகின்றனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது மட்டுமின்றி இளையோர் தன்முனைப்பு முகாம், யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தேர்வு வழிக்காட்டி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

மாணவர்களிடம் உள்ள தயக்க நிலையை போக்கினால் அவர்களை முறைப்படுத்துவது எளிதான காரியமாகிவிடும். இவ்வாறான வழிமுறைகளை தான் திஎஸ்திபி இத்தனை காலம் செயலபடுத்தி வருகிறது.

திஎஸ்திபியின் அனைத்து முயற்சிகளுக்கு சொந்த பணத்தை தான் பயன்படுத்தி வருகிறோம். அனைத்தும் உறுப்பினர்களின் சொந்த உழைப்பில் தான் சாத்தியமாகி வருகிறது.

தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி தேசியப் பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவது, வழிக்காட்டுவது, தன்முனைப்பு உரை நிகழ்த்துவது என பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மஇகா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர் அப்பிரிவின் கல்வி குழு தலைவராக செயலாற்றினார். அரசியலில் எப்போதும் தனி ஈடுப்பாடு கொண்ட இவர் சிறு வயதில் பத்திரிக்கையில் அரசியல் செய்திகளை படித்தைப் பற்றி நினைவுக் கூர்ந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் திஎஸ்திபியின் செயல்பாடுகளை கவனித்த அப்போதைய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சி.சிவராஜ் இவரை மஇகா இளைஞர் பிரிவில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு துன் டாக்டர் மகாதீரின் அடையாள தரவுகளை பற்றி வெளிப்படையாக பேசிய அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக கருத்து தெரிவித்து கட்சியின் தலைமைத்துவத்தை புருவத்தை உயர்த்தி பார்க்கச் செய்தது. இதனால் கட்சியின் தலைமைத்துவதுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

அதோடு, உலு லங்காட்டில் ஒரு பள்ளியில் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு தனி குவலை வைத்த சர்ச்சை வெளியான போது அச்சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த கணேசன் மீண்டும் தலைப்புச் செய்தியானார்.

தற்காலிக நீக்கத்திற்கு பின்னர் மீண்டும் அவர் அரசியலுக்கு வந்தார். ஆனால் அரசியல் ஈடுப்பாட்டினால் இயக்கத்தின் வேலைகளின் கவனம் செலுத்த முடியவில்லை என கருதினார். அதுமட்டுமின்றி தம்முடைய இந்த சமூகச் சேவையில் தொடக்கத்திலிருந்து தோளோடு தோளாக இருந்த திஎஸ்திபி உறுப்பினர் கே.கலாதேவியை அவர் திருமணம் செய்துக் கொண்டார். இயக்கத்தின் மூலம் சமூகச் சேவையை தொடர விரும்பிய அவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலை விட்டு தற்காலிகமாக விலகினார்.

மலேசிய தேசிய இன்டகிரிட்டியின் புதிய திட்டத்தின் இணை ஏற்பாட்டாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றினார். கடந்த 2012ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் இளைஞர் விருதை சிங்கப்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கி கெளரவித்தது. அதோடு நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய சபை நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியர் இவராவார்.

தம்முடைய அடுத்தக்கட்ட நகர்வை பற்றி விவரித்த கணேசன், திஎஸ்திபி மூலம் அடுத்த சந்ததியின் தலைவர்களை உருவாக்கும் பணியில் இறங்கப் போவதாக கூறினார்.

ஏற்கெனெவே நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் முன்னேற்றங்கள் பெரியளவில் உள்ளன. தம்முடைய இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு மாணவன் தாம் வெற்றிக்கு திஎஸ்திபியின் பங்கு அளப்பரியது என்று பேசியதை அவர் நினைவுக் கூர்ந்தார்.

தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் தன் தந்தையை போலவே தாமும் கார் பழுது பார்க்கும் வேலை செய்யப் போவதாக கூறினார். அதே துறையில் தொழில்நுட்ப முறையில் இயந்திர பொறியியலை  தேர்தெடுங்கள் என்று அந்த மாணவனுக்கு அறிவுறுத்தினோம்.

சில வருடங்களுக்கு பின்னர் அம்மாணவன் இயந்திர பொறியியல் துறையில் இறுதியாண்டு கல்வியை படித்து வருவதாக கூறினார். அம்மாணவன் பின்னர் இயக்கத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார். இது தான் திஎஸ்திபியின் வெற்றி என்று கணேசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here