படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது30), ராமச்சந்திரன் (30), சகிலன் (45), பாக்கியராஜ் (35) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 4 பேரும் மீன்பிடித்துக்கொண்டு நேற்று அதிகாலை கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரைக்காலை சேர்ந்த விசைப்படகின் வலை கயிற்றில் இவர்கள் வந்த படகு சிக்கி கவிழ்ந்தது.
இதனால் 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்த காரைக்கால் மீனவர்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டனர். பின்னர் படகையும், வலைகளையும் மீட்டுக்கொடுத்தனர். இதுதொடர்பாக காரைக்கால் மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் ஏற்பாட்டில் மீனவர்கள் சிலர் 2 படகுகளில் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய படகையும் கரைக்கு அழைத்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here