ஊழலை ஒழிக்கக் கைது நடவடிக்கை மட்டும் போதாது: தடுப்பும் விழிப்புணர்வுமே நிரந்தரத் தீர்வு! – SPRM தலைமை ஆணையர்

கோலாலம்பூர்:

“ஊழல் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதுடன் நமது கடமை முடிந்துவிடக் கூடாது; அதையும் தாண்டி குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலற்ற சமூகத்தை உருவாக்கத் தடுப்பு நடவடிக்கைகளும், மக்களுக்கான விழிப்புணர்வுப் பணிகளுமே அடித்தளமாக அமையும் என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலமே ஊழலுக்கு எதிரான போரை முழுமையாக வெற்றிபெறச் செய்ய முடியும் என்றார்.

மேலும், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தங்களது பணியில் உறுதியுடனும், நடுநிலையுடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், வெளித்தரப்பு அழுத்தங்கள் அல்லது அரசியல் செல்வாக்குகளுக்கு வழிவகுக்காமல், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூச்சிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, சரவாக் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் நிர்வாக மேம்பாடுகள் குறித்த விவரங்கள் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமானிடம் நேரில் விளக்கமளிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here