அட! இந்த பொருட்களையெல்லாம் வைத்து கூட குழம்பு வைக்கலாமா?

இட்லி, தோசை, சப்பாத்தி என்று சுலபமாக டிபன் வகைகளை செய்து விட்டாலும், இதற்கு தொட்டுக்கொள்ள, தினம்தோறும் சட்னி, குருமா, சாம்பார் என்றுதான் நம் வீட்டில் செய்வோம். இவைகளைத்தாண்டி சுலபமான முறையில் பத்தே நிமிடத்தில் சுவையான குழம்பு எப்படி வைப்பது?

பேக்கரியில் இருந்து வாங்கும் பெரிய காராசேவு, சிறு காரா பூந்தி, பக்கோடா இந்த மூன்று பொருளை வைத்து நொடிப்பொழுதில் சட்டென்று ஒரு குழம்பை தயாரிக்கலாமே! அடுத்ததாக வெறும் உருளைக்கிழங்கு வெங்காயம் இது இரண்டையும் வைத்து ஒரு குழம்பு எப்படி செய்வது? பார்த்து விடலாமா?

இந்த குழம்பு வகைகளின் செய்முறையை, பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு குழம்பு வகையா? என்று செய்யாமல் மட்டும் விட்டுவிடாதீர்கள். சுலபமாக, சுவையாக இருக்கும் குழம்புவகைகள் இவை! ஒரு முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வீட்டில் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

சிலபேருக்கு இந்த குறிப்புகள் தெரிந்திருக்கலாம். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியாதவர்கள் படித்து பயன் பெறுங்கள்!

உருளைக்கிழங்கு வெங்காயம் சேர்த்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு 2 – தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். சோம்பு – 1 ஸ்பூன், எண்ணெய் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு தேவையான அளவு. அடுப்பில் ஒரு குக்கரை வைத்து விட்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில் சோம்பு  தாளிக்க வேண்டும். அதன் பின்பு கறிவேப்பிலை சேருங்கள். அதன் பின்னர் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்பாக உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்கி விடுங்கள்.

அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் போதுமானது.

அதன் பின்பாக குழம்பிற்கு தேவையான அளவு, உப்பு, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கலக்கி விட்டு விடுங்கள். குழம்பு நன்றாக கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, குக்கரில் மூடி போட்டு, மூன்று விசில் வைத்தால் போதும்.

ஒரு விசில் வரும் போதே, உங்களுக்கு அந்த குழும்பில் இருந்து ஒருவிதமான வாசனை வரும். அப்போதே தெரிந்து விடும். நீங்கள் வைத்த குழம்பு எத்தனை சுவையாக உள்ளது என்று. குக்கரில் பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, குழி கரண்டியை போட்டு, உருளைக்கிழங்கை நன்றாக மசித்து விடவேண்டும்.

முடியவில்லை என்றால் கீரை கடையும் மத்து போட்டு, ஒரு கடை கடைந்து விட்டுவிடுங்கள். உருளைக்கிழங்கும் வெங்காயமும் ஒன்றாக இணைந்து, இழைந்து கிரேவி பதத்திற்கு வர வேண்டும். இந்த குழம்பிற்கு தேவையான பொருட்களும் மிகவும் கொஞ்சம் தான். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கொள்ளுங்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவ பிரியர்களுக்கு கொஞ்சம் காரம் தூக்கலாக சேர்த்துக் என்றால், அசைவ குழம்பு வாசம் வரும். அடுத்ததாக சிறு காரா பூந்தி, பெரிய காராசேவு, பக்கோடா இந்த மூன்று பொருட்களில் குழம்பு வைப்பது எப்படி?

100 கிராம் அளவு காராபூந்தி எடுத்துக் கொண்டால், அதற்கு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் சோம்பு தாளித்து, கருவேப்பிலை போட்டு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பின்பாக குழம்பிற்கு தேவையான தண்ணீரை ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக கடையிலிருந்து வாங்கி வைத்திருக்கும் சிறு காராபூந்தி ஆக இருந்தாலும் சரி, பெரிய கார சேவாக இருந்தாலும் சரி. அந்த கொதிக்கின்ற மசாலா தண்ணீரில் சேர்த்து விட வேண்டும்.

சிறிய காராபூந்தி யை போட்டு குழம்பு வைப்பதாக இருந்தால்,  ஐந்தே நிமிடத்தில் குழம்பு தயாராகிவிடும். (சிறிய காராபூந்தி, மசாலா தண்ணீர் ஊறி இருக்க வேண்டும் தவிர அதை குழைய விடக்கூடாது.) பெரிய காராசாவு நீங்கள் சேர்த்தால், அது வேக கொஞ்சம் நேரம் அதிகமாக எடுக்கும். ஏழிலிருந்து பத்து நிமிடம். தண்ணீரில் அந்த பெரிய காரா சேவு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

(பெரிய காராசேவு ஓரளவுக்குக் குழையலாம், மொத்தமாக குழைய விடக்கூடாது.) இதே குழம்பில் பக்கோடா சேர்க்க வேண்டும் என்றால், பக்கோடாவை போட்டுவிட்டு பத்து நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.

பக்கோடா சேர்த்த குழம்பு, வடகறி பதத்தில் இருக்கும். இந்த மூன்று குழம்பு வகைகளையும் சுலபமாக செய்து முடித்துவிடலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் இதில்,  ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

சில பேர் இறுதியாக, இந்த குழம்புக்கு, கொஞ்சம் தேங்காயை அரைத்து ஊற்றி, கொதிக்க வைத்து இறக்குவார்கள். (ஆனால் தேங்காய் ஊற்றாத குழம்பிற்கு ருசி அதிகம். காரசாரமாக இருக்கும்.) இட்லி, தோசை, சப்பாத்தி இந்த மூன்றுக்கும், சுலபமான மூன்று வகையான குழம்புகள் நொடிப்பொழுதில் தயார் செய்துவிடலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த குறிப்பை ஒருமுறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here