திரும்பிப் பார்க்கிறோம்

அதே கண்கள் -1967

முகக் கவசம் அணியும் காலம் இது என்பதால் முகக்கவசத்திற்குள் மனதை நுழைத்து சிந்தித்தபோது கவசத்தையும் கடந்து காற்றில் தவழ்ந்து வந்தது 1967ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய ‘அதே கண்கள்’ திரைப்படம்.

நெடிய சுவாரசியத்திற்காக முகக்கவசம் என்று சொல்லாமல் முகமூடி என்று வைத்துக் கொண்டு அதே கண்களைப் பின்தொடர்வோம்.

முகமூடி அணிந்திருக்கும் வில்லன் ஒருவனால் ஒரு மாளிகையில் வசிக்கும் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருவார்கள்.

யார் அந்த முகமுடிக் கொலைகாரன்? எதற்காக அவன் தொடர்ந்து கொலை செய்து வருகிறான்? அவனது தேவைகள் என்ன என்பதெல்லாம் கொலைகளைத் தொடர்ந்து எதிரொலிக்கும் கேள்விகள்.

காதலியின் உறவினர்கள் கொல்லப்படுவதால் அந்த கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனாக கதாநாயகன் மாறிவிடுகிறான்.

அவ்வாறு மாறும்போது கதாநாயகனின் உயிருக்கே சவால் விடும் வகையில் முகமூடி மனிதனின் செயல்பாடுகள் அமைந்து விடுகின்றன.

இசையமைப்பாளர் வேதாவின் பயமுட்டும் பின்னணி இசையின் பின்பலத்துடன் தொடர்ந்து துப்பறியும் கதாநாயகன் இறுதியில் முகமூடி  அணிந்தவன் யாரென்று கண்டுபிடித்து விடுகிறான்.

நான் இதற்கு முன்னர் பார்த்த அதே கண்களை இப்போது பார்க்கிறேன் என முடிக்கும்போது அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர் யார் என்பதில் திரைப்படமும் நிறைவு பெறுகிறது.

யார் அந்த முகமூடிக்காரன் என்பதை இன்னமும் இத்திரைப்படத்தைப் பார்த்து ரசிக்காத இளைய தலைமுறைக்காக இங்கேயும் ரகசியப்படுத்துகிறோம்.

ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஒரு துப்பறியும் கதையை திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையில் விளைந்ததுதான் ‘அதே கண்கள்’.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் மலேசியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நடித்த 13ஆவது படமாக  அதே கண்கள் வெளியாகும் தருணத்தில்  அவருக்கு ‘சின்ன எம்.ஜி.ஆர்’ பட்டப் பெயர் வந்து விட்டது.

இதற்கு முன்னர் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, இதயகமலம், கல்யாண மண்டபம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, குமரிப் பெண், தேடி வந்த திருமகள், எங்க பாப்பா, நாம் முவர், கௌரி கல்யாணம், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, தங்கத்தம்பி, மகராசி போன்றவை வந்து விட்டன.

காதலிக்க நேரமில்லை, இதய கமலம் இரண்டும் வெள்ளி விழாப் படங்கள். சிவாஜி கணேசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை 100 நாள் படம்.

எங்க பாப்பா, நாம் முவர், கௌரி கல்யாணம், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி ஆகியவையும் 100 நாள் படங்கள்.

மற்றவை ‘முதலுக்கு மோசமில்லை’  என்ற அளவுக்கு ஓடிய படங்கள் என்பதால் வெள்ளி விழா நாயகன் என்ற அடைமொழியுடன் அதே கண்களில் நடித்தார் ரவி.

26.5.1967 அன்று வெளியாகி அபார வசூலை அள்ளிக் குவித்தது ‘அதே கண்கள்’.

மைசூர் பிருந்தாவனம், சென்னை குதிரைப்பந்தய மைதானம், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை என தமிழ்த் திரை ரசிகர்கள் இதுவரை வண்ணத்தில் பார்க்காத இடங்களை எல்லாம் ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் அழகாகப் பதிவு செய்திருந்தார்.

மலேசியாவைப் பொறுத்தமட்டில் கோலாலம்பூர் இந்துஸ்தான் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் படத்தைப் பார்க்கக் கூடி விட்டதாம்.  

டிக்கெட் கிடைக்காமல் பலர் வீடு திரும்பியதாக நமக்கு வேண்டிய முன்னோர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.   

இத்தனை களேபரத்திற்கும் கவிஞர் வாலியும் இசையமைப்பாளர் வேதாவும்தான் காரணம்.

கொலம்பியா இசை நிலையத்திலும் படம் வருவதற்கு முன்பே இசைத்தட்டுகளை வாங்கிச் செல்ல பெருங்கூட்டம் கூடி  விட்டதாகச் சொல்வார்கள்.

படத்தின் மொத்தப் பாடல்களையும் வாலியிடம் கொடுத்து விட்டால் அத்தனை பாடல்களையும் ஜனரஞ்சகமாக எழுதி பிரபலமாக்கி விடுவார் என்ற பெயர் இந்தப் படத்தில் இருந்துதான் இவருக்குக் கிட்டியதாம்.

மலேசியாவில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் மக்கள் அதே கண்கள் குறித்துதான் அதிகமாக அப்போது பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன் யார்னு… யார்கிட்டேயும்  சொல்லக்கூடாதுன்னு டைட்டில் கார்டிலேயே போட்டிருக்காங்கப்பா. அதனால நேரா போய் படத்தைப் பார்த்துக்கோ!’ என தெனாவெட்டாகப் பேசிய இளைஞர்களும் யுவதிகளும் அதிகம் என வீட்டுப் பெரியண்ணன் ஒரு முறை அவரது நண்பரிடம் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.

அதே கண்கள் படத்தைப் பார்த்து விட்டு வந்து படத்தின் காட்சிகளையும் அழகிய மேடை அமைப்புகளில் மீன்கள் மிதப்பதை விவரிப்பதையும் கௌரவமான விசயமாக அப்போது கருதி செயல்பட்டவர்களும் உண்டு.

அழகிய பிளாஸ்க் தாளில் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்ட ரிக்கார்டுகள்  அமோகமாக விற்பனையானதாம்.

படத்துக்குக் கூட்டம் அதிகமாக இருந்ததுன்னு சொன்னோமில்லையா? அதுக்குக் காரணம் பாடல்கள்தாம்.

பட்டணம் தொடங்கி பட்டி தொட்டி வரையில் பாடல்கள் ஏற்படுத்திய பரபரப்பு சுவாரசியமானது.  

ஒரு படத்தை திரையரங்கு வரை சென்று இருக்கையில் அமர்ந்து  பார்த்தாக வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை நமது மனத்திரை முன்பு ஓட விட்ட பின்னர்தான் வெள்ளித்திரை அகலும் காட்சியை கண்கள் காண முடியும் என்ற காலம் அது!  

அந்த ரகம்தான் ‘அதே கண்கள்’.

“பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி-டும் டும் டும் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி” என்ற பாடலில் ஆபாசம் இருப்பதாகவும் அதையும் சொல்லாமல் சொல்லியிருக்கும் வாலியின் எழுத்து நடையழகு கவர்வதாகவும் அப்போது பேச்சு இருந்தது.

“கண்ணுக்குத் தெரியாதா-பெண்ணுக்குப் புரியாதா” பாடல் தமிழுக்குப் புதுமையான இசையாக அப்போது தெரிந்தது. டிரம்ஸ் இசையை மிகத்தெளிவாகக இசையமைப்பாளர் வேதா கையாண்ட விதம் ரசிகர்களைக் கவர்ந்தது.

“வா அருகில் வா” என்ற பாடல் பி.சுசிலாவின் குரலாக மாய வலையோடு வலம் வந்து வசீகரித்தது. சவுக்குத் தோப்புக்குள் ஒலிக்கும் மாயக்குரல் பின்னணியில் ரவிச்சந்திரன் மறைந்திருந்து வேவு பார்க்கும் காட்சிகள் பார்ப்பவர்களுக்குத் திகில் உணர்வை ஊட்டும்.

“ஓ.. ஓ.. எத்தனை அழகு 20 வயதினிலே” பாடல் தனி சுகத்தை அள்ளிக் கொடுத்தது. டி,எம்,எஸ்சின் வித்தியாசமான குரல் ஓங்கி ஒலித்த விதம் பாடலைக் கேட்கும் அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்தது. மைசூர் பிருந்தாவனத்தை வண்ணத்தில் பார்ப்பது கண்களை குளிர்ச்சியாக்கியது.

“பொம்பள ஒருத்தி இருந்தாளாம்” பாடல் டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன் கூட்டணியில் களை கட்டியது. இருவருமே சௌராஸ்டிரர்கள் என்பதால் அந்த மொழியை பாடலின் நடுவே அவர்கள் திணிக்க அது இசையமைப்பாளர் வேதாவுக்கும் பிடித்துப் போனது.

சொடிஜாவும் டாக்கரவும் காஞ்சனாவை பயமுறுத்தும் வாசகங்களாக காட்சியின்போது வெளிப்படுத்தப்பட்டன. சௌராஸ்டிர மொழியில் சொடிஜா என்றால் ‘என்னை விட்டு விடு’ என்று அர்த்தமாம். டாக்கர என்றால் ‘நான் பயந்துட்டேன்’ என்று அர்த்தமாம்.

“என்னென்னவோ நினைத்தேன்” பாடலும் வித்தியாசமான வார்ப்பாக அமைந்திருந்தது. கடல் அலைகளின் நடுவே அழகிய காட்சியாக அது விரிந்த விதம் அலாதியானது.  

“சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்” பாடல் அனைவரையும் கவர்ந்த இருகுரலாக பல காலம் வானொலியில் ஒலித்தது. ரசிர்களின் துரதிர்ஷ்டமோ என்னவோ படத்தில் இப்பாடல் இடம் பெறவேயில்லை. .’சித்திர மேனியை தொட்டுத் தடவிட ஏனோ இப்படி துடிக்கிறான்’ என்ற வரிகள் ஆபாசமாக உள்ளது என்ற சர்ச்சை காரணமாக அப்பாடலை படமாக்காமலேயே விட்டு விட்டார்களாம்.

கதாநாயகியாக நடிகை காஞ்சானா அதிர்ச்சியை படம் முழுக்க அபாரமாக சித்தரித்துக் கொண்டே வருவார். திகில் படம் என்பதால் நகைச்சுவைப் பகுதியையும் நடிகர் கருணாநிதியை வைத்து திகிலாகவே கொடுத்திருப்பார்கள்.

காஞ்சானாவுக்கு சித்தப்பாவாக அசோகன். அவருக்கு தம்பியாக ராமதாஸ் என அனைவர் முகத்திலும் அதிர்ச்சி அலைகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

நாகேஷ் மட்டுமே அவர் பாணியில் அதிர்ச்சியின் முதிர்ச்சி எதுவுமின்றி  நகைச்சுவையில் பின்னி எடுத்திருப்பார்.  

ஜனரஞ்சம் நிறைந்த ஒரு திகில் படத்தைக் கொடுப்பதற்கு திட்டமிட்ட இயக்குநர் ஏ,சி,திருலோகசந்தர் முதலில் எம்.ஜி.ஆரை வைத்துதான் இந்தப் படத்தை இயக்குவது என்ற முடிவில் இருந்தாராம். 

இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் இவர் தலைவரை வைத்து “அன்பே வா” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார் என்பதால் இம்முறை ரவிச்சந்திரனை தேர்வு செய்தாராம்.

இன்று வெளியாகும் அனைத்து ஜனரஞ்சகப் படங்களுக்கும் ஒரு முன்னோடியாக ற ‘அதே கண்கள்’ பலமாகப் பெயர் பதித்து விட்டது. பாடல்கள் இன்னமும் யூடியுப் தளத்தில் பலரால் பார்க்கப்பட்டு அதிகம் கண்ணுற்றோர் வரிசையில் முன்னணி வகிக்கிறது.

தமிழ் நடிகர்கள் பல பேருக்கும் புதிய பிம்பத்தை, தான் இயக்கும் திரைப்படங்கள் வாயிலாக உருவாக்கிக் கொடுத்த மாபெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் தமிழ்த்திரை உலகின் “மெருகுத் தந்தை” இவர்.

ஏ.சி.திருலோகச்சந்தர் குறித்து பிரிதொரு நாளில் விரிவாகப் பேசுவோம்.

 

மு.ஆர்.பாலு

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here