காசா மூசா லேசா! சபா அரசியலில் நெருக்கடி தேசிய அரசியலுக்கு சவுக்கடி

சில நாட்களாக சபா மாநில அரசியல் ஏற்பட்டு வந்த நெருக்கடியானது தேசிய அரசியலுக்கு விடப்படும் சவுக்கடியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!

மாநில முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் தற்போதைய முதல்வர் ஷாபி அப்டாலிடமிருந்து அதிகார சவுக்கைக் கைப்பற்றக் கூடும்  நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில மாநில யாங்டி பெர்த்துவா துன் டத்தோஸ்ரீ பங்ளிமா ஹாஜி ஜுஹார் ஹாஜி மஹிருதீனை சந்திக்கவிருப்பதாக செய்திகள் பரபரப்பாகக் கசியத் தொடங்கியுள்ளன.

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருப்பதாக நிருபித்து சபா மாநில முதல்வராக மூசா அமான் எந்த நேரத்திலும் பதவியில் அமரலாம் என்ற நிலை உள்ளது.

யாங் டி பெர்த்துவாவுடன் இன்று சந்திப்பு நடத்தப்பட்டு விட்டால்,,,,

தனது பெரும்பான்மையை ,,,

இன்று நடைபெறும் சந்திப்பில் மூசா நிருபித்து விட்டால்

சபாவில் ஆட்சி கவிழும்!

மாநில முதல்வராக மூசா பதவியேற்கும் நிலை ஏற்பட்டு விடும்.

அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை தனக்கு ஆதரவாகக் கொண்டிருக்கும் காரணத்தால் தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஷாபி அப்டாலின் அரசியல் வானத்தை கருமேகங்கள் சூழும் வாய்ப்பும் வந்து விடும்.   

சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வராக வந்து விட்டால் மூசா அமான் தனது அடுத்த கட்ட நகர்வை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொண்டு வரலாம்.

சபா அரசியலைப் பொறுத்தவரையில் எதுவுமே எளிதில் சாத்தியமாகும் என்ற நிலைதான் பல காலமாக உள்ளது.

தேசிய அரசியலின் பலமும் சபா மக்களே..

பலவீனமும் சபா மக்களே,

என்பதை நாம் மறந்து விட முடியாது.

வாக்களிப்பில் காட்டும் ஆர்வத்தை அடித்தட்டு மக்கள் அவர்களுக்கான எண்ணெய் வளம் மற்றும் காட்டு வளத்தை மாநில அதிகாரத்திற்குக் கொண்டு வர முனைவதற்கு காட்டுவது குறைவு என்ற அடிப்படையில் பார்ப்போமானால்…

சபா மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி போல நொடிக்கு நொடி மாறி விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட முடியும் என்றால் தேசிய அரசியலும் ஒரு அம்னோ திடமாகக் கால் பதிக்கும் காலம் எளிதில் கனிந்து விடும் என்றே தெரிகிறது.

சபா மாநிலத்தின் 14ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்ற அனுபவமிக்க மூசா  அமான் தேன் கூட்டைக் களைக்காமல் விடமாட்டார் என்றே தெரிகிறது.

65 சட்டமன்றங்களை சபா கொண்டுள்ளது.

வாரிசான் கட்சி 22 இடங்களையும் பக்காத்தான் 7 இடங்களையும் அப்கோ கட்சி 1 இடத்தையும் பெரிக்காத்தான் நேசனல் 17 இடங்களையும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் சபா மாநில சட்டமன்றத்தை அலங்கரித்து வருகிறார்கள்.

இந்த அலங்காரத்தைக் கலைக்கும் அவதார அரசியலில் மூசா அமான் 15 சுயேட்சைகளை முதலில் தன்பக்கம் இழுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

பெரிக்காத்தான் நேசனல் கட்சியும் சுயேட்சைகளும் இணைந்தால் 32 இடங்கள் என்ற பெரும்பான்மை இருக்கிறது என்ற முனைப்போடு மூசா அமான் செயல்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. 

இவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் காட்டி விட்டால் சபாவில் மாற்றம் வந்து விடும்.

இந்த நிலையானது பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முகிடின் யாசினுக்கும் முன்னாள் பிரதமர் என்ற வகையில் துன் டாக்டர் மகாதீருக்கும் பிரதமர் பதவிக்கு அமரும் வாய்ப்பு இருப்பதாக நீண்ட காலமாக கருதப்பட்டு வரும் அன்வார்  இப்ராஹிமுக்கும் அரசியல் சறுக்கலை ஏற்படுத்தும்.

மூசா அமான் அம்னோகாரர்…

சபா மாநில அம்னோ தலைவர்…

இவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பாரேயானால் சபா அம்னோ பலப்பட்டு விடும்.

அதனை பலப்படுத்தும் அனுபவம் இவருக்கு அழுத்தமாகவே உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து வசியப்படுத்த முடியும் என்றால் அடுத்து சபா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இவர் வசியப்படுத்துவார். இதன் முலம் தேசிய அரசியலில் முக்கிய புள்ளியாக இவர் மாறுவார்.

இத்தனையும் நடக்க வேண்டும் என்றால் இன்று சபா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு நேர வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் மாநிலம் வழக்கம் போல ஷாபி தலைமையில் செயல்படும். நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் ஆட்சியைக் கலைத்து மாநிலத் தேர்தலுக்கு ஷாபி வழிவகுக்கலாம்.

 

தற்போது சபா மாநிலத்தை ஆட்சி புரியும் வாரிசான் கட்சிக்குத் தலைவராக இருக்கும் ஷாபி அப்டால் பலமிழந்து போகும் நிலை உருவாகுமானால் மட்டுமே அவரை நம்பியே காய் நகர்த்தி வந்த துன் மகாதீருக்கு தேசிய அரசியலில் பின்னடைவு ஏற்படும்.

பெர்சத்து கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பொறுப்புக்கு வந்த முகிடின் யாசினுக்கும் அவர் வகிக்கும் பதவியில் ஒரு நெருக்குதல் வரும்.

துன் மகாதீரின் அரசியல் வண்டி ஷாபி அப்டாலை நம்பியே ஓடிக் கொண்டிருந்தது. 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய அரசியலைக் கலக்கிக் கொண்டிருந்த ஷாபியின் அதிகாரம் வலுவிழந்து போகும்.

மூசா அமான் மாநில அம்னோ தலைவர் என்பதால் அம்னோவின் கை தேசிய அரசியலில் ஓங்கும் நிலை ஏற்படும்.

14ஆவது பொதுத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ  மூசா  அமானின் முதலமைச்சர் பொறுப்பு மற்றொரு நெருக்கடியை தேசிய அரசியலில் ஏற்படுத்தப் போவதை தடுத்து நிறுத்தும் மற்றொரு அரசியல் போராட்டம்  அரங்கேறத்தான் போகிறது!

-மு.ஆர்.பாலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here