கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி மெகா திட்டம்

கர்நாடகத்தின் தலைநகராக பெங்களூரு விளங்குகிறது. தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் 1½ கோடி மக்கள் வசிக்கிறார்கள். கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா மாநகரில் ருத்ரதாண்டவமாடி வருகிறது. இதனால் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதுபோல் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பெங்களூருவில் 48 ஆயிரத்து 755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பேர் பெங்களூரு நகர வாசிகள் என்பது அதிர்ச்சி தகவல். இதற்கிடையே ஆகஸ்டு மாதத்தில் கொரோனாவின் தாக்கம் புதிய உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் கொரோனா பரவலை சமாளிக்கவும், தடுக்கவும், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பெங்களூரு மாநகராட்சி மெகா திட்டங்களை அமல்படுத்த திட்டம் வகுத்துள்ளது. அதாவது கர்நாடக அரசு 4 லட்சம் ரேபிட் ஆன்டிஜன் கருவிகளை வாங்கியுள்ளது. இதில் 2 லட்சம் ரேபிட் ஆன்டிஜன் கருவிகளை பெங்களூரு மாநகராட்சி வாங்கி, மாநகர் முழுவதும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் தினமும் 2 லட்சம் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்து, மேலும் தொற்று பரவாமல் தடுக்கலாம் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதுபோல் கொரோனா பாதித்த பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்திமிக்க மூலிகளை மருந்துகளை வினியோகிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. நகர்ப்புற சேரி, ஏழை, நடுத்தர வர்க்க பகுதிகளை பிரித்து இந்த பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதுபோல் லேசான அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், ஊட்டச்சத்து உணவுகள், ஆக்சிமீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கவும் மாநகராட்சி தீர்மானித்து உள்ளது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கொரோனா ஊரடங்கு மற்றும் விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தவும் முடிவாகி இருக்கிறது. அதாவது முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த மாநகராட்சி பரிசீலித்துள்ளது.
மேலும் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய அறிக்கை வந்ததும், அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரவும் மாநகராட்சி பெரிய திட்டத்தை முன்னெடுத்து செல்ல தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கு கர்நாடக அரசும் சம்மதம் கொடுத்துள்ளது. நேற்று முதல் இந்த மெகா திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி ஆயத்தமாகிவிட்டது. இருப்பினும் ஒரு கை தட்டினால் ஓசை வராது. மக்களும், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான், கொரோனா பரவலை பெங்களூரு மாநகரில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here