ராஜஸ்தான் முதல்-மந்திரி பேட்டி

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளததால் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட்டு தடை விதித்து இருக்கிறது.
சச்சின் பைலட் உதவியுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா இழுப்பதை தடுப்பதற்காக, ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர்களை, முதல்-மந்திரி அசோக் கெலாட் ஜெய்சல்மார் நகருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கவைத்து இருக்கிறார்.
அங்கிருந்து நேற்று ஜெய்ப்பூர் புறப்படும் முன் அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு யாருடனும் சண்டை கிடையாது. ஜனநாயகத்தில் கொள்கைகளுக்காக, திட்டங்களுக்காக மோதல்கள் ஏற்படுவது வழக்கமானதுதான். அது அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் அளவுக்கு போகக்கூடாது. சட்டசபை கூடும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியும், அவர்களுக்கான விலையும் அதிகரித்து இருக்கிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சியை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக அவருக்கு மீண்டும் கடிதம் எழுதுவேன். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் மேலிடம் விரும்புவதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மன்னித்தால் அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here