ரிதம் பவுண்டேசன் – மைஸ்கில்ஸ் உடன்படிக்கை ஒப்பந்தம்

சமூக கடப்பாடு அனைத்து மனிதர்களிடமும் இருக்க வேண்டும் என்று அனைத்து கால கட்டங்களிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பெரிய நிறுவனங்கள் தங்களின் சமூக கடப்பாட்டினை அதிகளவில் சமுதாயத்திற்கு பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வழி தவறிய மற்றும் குடும்ப உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது மைஸ்கில்ஸ் அறவாரியம். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அறவாரியத்தை வழி நடத்தி வருகிறார் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம்.

அவரின் இம்முயற்சிக்கு தோள் கொடுக்கும் வகையில் கிஃயூ ஐ நிறுவனத்தின் ரிதம் பவுண்டேசன் மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் இருந்து 25 மாணவர்களைத் தேர்வு செய்து ஒரு வருடக் காலம் தொழிற்கல்வி பயிற்சியினை வழங்கவிருக்கிறது. அதற்கான ஒரு உடன்படிக்கை ஒப்பந்தம் கிஃயூஐ அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் ஸ்தாபகர் பசுபதி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை சுலபமாக கற்று தந்து விடலாம். ஆனால் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளை மாற்றுவதற்கே கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

காரணம் எங்கள் அறவாரியத்தில் இருக்கும் பல மாணவர்கள்  குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் அல்லது கல்வியை பாதியிலேயே கைவிட்டவர்களாவர். அதனால் அவர்களை நல்வழிப்படுத்துவது சற்று சிரமமான காரியமாகும். ஆனால் எங்கள் அறவாரியத்தில் இருந்த பல மாணவர்கள் இன்று மிகவும் உயரிய நிலையில் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய கிஃயூஐ நிறுவனத்தின் இயக்குநரும்  ரிதம் பவுண்டேசன் தலைவருமான டத்தின்ஶ்ரீ உமையாள் ஈஸ்வரன்  அனைவரும் தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  செய்ய வேண்டும். எங்கள் பவுண்டேசன் வழி உலகளவில் உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்கள் நிதியுதவி மட்டும் வழங்காமல் அவர்களுடன் இறுதி வரை இணைந்து பணியாற்றுவோம். அந்த வகையில் தற்பொழுது மைஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்கள் 25 பேருக்கு தொழிற்கல்வி பயில ஏற்பாடு செய்திருக்கிறோம். நாம் நிதியுதவி மற்றும் கல்வியை வழங்கினாலும் மாணவர்கள் தங்களுக்குள் வைராக்கியத்தை வளர்த்து கொண்டு முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here