எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள்?

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என கூறினார்.

எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் இந்த கருத்தினை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “நமது படையினர், துணை ராணுவத்தினர், போலீஸ் படையினர் மீது 130 கோடி இந்தியர்களும், அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் பெருமைப்படுகிறோம். (எல்லையில்) தாக்குதல் நடந்தபோதெல்லாம், அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனால், ஆட்சியாளர்கள் (பிரதமர் மோடி) சீனாவின் பெயரை சொல்வதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்” என சாடினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

சீனா, நமது பிரதேசத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. சீன படைகளை விரட்டியடித்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க என்ன திட்டத்தை முன் வைத்திருக்கிறது என்று அரசை நாம் கட்டாயம் கேட்க வேண்டும்.

சுய சார்பு இந்தியா பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்து தந்தவர்கள், பண்டித ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள்தான்.

சுயசார்பு இந்தியா பற்றி பேசிக்கொண்டு, 32 பொதுத்துறை நிறுவனங்களை விற்று விட்டார்கள்; ரெயில்வேயையும், விமான நிறுவனங்களையும் தனியார் துறையிடம் தாரை வார்த்து வருகிறார்கள்; இதுபற்றி அரசாங்கத்தை கேட்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here