கவர்னர் மாளிகை நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை – மீண்டும் சர்ச்சை

சென்னை: தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற உடை அணிந்திருப்பார். ஒரு கையில் எழுத்தாணி, இன்னொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பார். ஆனால் சமீபகாலமாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் திருவள்ளுவருக்கு காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருவது சர்ச்சையை கிளப்பியது. திருவள்ளுவருக்கு சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இதனால் காவி உடை அணிவதை ஏற்காமல் திமுக உள்பட பிற கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவள்ளுவர் திருநாள் விழா

கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கவர்னராக இருந்த ஆர்.என். ரவி இதுபோன்ற புகைப்படங்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். தற்போது ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில கவர்னராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு பதில் கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இப்படியான சூழலில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here