வங்கி லாக்கரில் வைத்து பாதுகாத்து வரும் தேசிய கொடி

இன்றைய காலத்தில் அனைத்திலும் புதுமை புகுந்துவிட்டது. இதனால் பழையதை கழித்துவிட்டு புதியதை வாங்கி குவிப்பதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அனைத்துக்கும் விதிவிலக்கு உண்டு என்பது போல் இதிலும் சிலர் பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால வீட்டு உபயோக பொருட்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

இவ்வாறு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு முதியவர் தான் வாங்கிய தேசியக் கொடியை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாத்து வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி அந்த தேசிய கொடியை அவர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து, தனது வீட்டு முன்பு ஏற்றி மரியாதை செய்து வருகிறார். தேசத்தின் மீது அளப்பரிய அன்பை கொண்ட இந்த முதியவர் பற்றிய விவரம் வருமாறு

தார்வார் (மாவட்டம்) டவுன் காந்திநகரை சேர்ந்தவர் கங்காதர் குல்கர்னி (வயது 86). இவர் தான் தேசிய கொடியை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாத்து வருகிறார். சுதந்திர தின விழாவையொட்டி தான் அதனை லாக்கரில் இருந்து வெளியே எடுக்கிறார். சுதந்திர தினத்தன்று தனது வீட்டு முன்பு அவர் அந்த தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.

கங்காதர் பாதுகாத்து வரும் தேசிய கொடிக்கு ஒரு வரலாறு உள்ளது. அதாவது ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு பல்வேறு தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரை கொடுத்தும் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரம் பெற்று தந்தனர். அந்த காலக்கட்டத்தில் கங்காதர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது அவரது ஆசிரியர்கள், தேசிய கொடியை வாங்கி வீட்டு முன்பு ஏற்றும்படி கூறியுள்ளனர். அதன்படி அந்த தேசிய கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நாடு விடுதலை பெற்ற போது வாங்கிய மூவர்ணகொடி என்பதால் அதனை அவர் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதைதொடர்ந்து தான் அவர் சிந்தனையில் வங்கி லாக்கரில் அந்த தேசிய கொடியை வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதன்படி காந்திநகரில் உள்ள வங்கியின் லாக்கரில் தேசிய கொடியை வைத்து பாதுகாத்து வருகிறார். இந்த தேசியக் கொடியை கங்காதரின் தாய் 2006-ம் ஆண்டு வரை சுதந்திர தினத்தன்று வீட்டு முன்பு ஏற்றி வந்துள்ளார். அவர் மறைந்ததை தொடர்ந்து 2007-ம் ஆண்டில் இருந்து கங்காதர் அந்த தேசிய கொடியை சுதந்திர தினத்தன்று தனது வீட்டு முன்பு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி லாக்கரில் இருந்து தேசிய கொடியை எடுத்து வந்த கங்காதர் நேற்று தனது வீட்டு முன்பு அந்த தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தேசத்தின் மீதான அன்பால் கங்காதர் தேசிய கொடியை போற்றி பாதுகாத்து வருவதாக கூறி அவரது செயலை அந்தப் பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து கங்காதர் கூறுகையில், இந்த தேசிய கொடியை நமது நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு நான் வாங்கியது. எனது ஆசிரியர்கள் சொன்னதன் பேரில் நான் தேசிய கொடியை வாங்கி வீட்டு முன்பு அப்போது ஏற்றினேன். அன்று முதல் இந்த தேசிய கொடியை எனது தாய் ஏற்றினார். அவரை தொடர்ந்து நான் சமீபகாலமாக சுதந்திர தினத்தன்று எனது வீட்டில் ஏற்றி வருகிறேன். நாடு சுதந்திரம் அடைந்த போது வாங்கிய தேசிய கொடி என்பதால், அதை பாதுகாப்பது எனது கடமை. மேலும் நாடு விடுதலை பெற்றதை நினைவுக்கூறும் வகையில் அந்த தேசிய கொடியை நான் பாதுகாத்து வருகிறேன். இதனால் வங்கி லாக்கரில் அந்த தேசிய கொடியை எனது சொத்தாக கருதி வைத்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here