பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி

கலபுரகி(மாவட்டம்) டவுனில் சவுக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் வங்கி உள்ளது. இந்த தனியார் வங்கியில் ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்களும் வங்கிக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில் வங்கிக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டினார். இதனால் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வாலிபர் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார். அப்போது சிலர் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சவுக் போலீசார் வங்கிக்கு வந்து அந்த வாலிபரை லத்தியால் அடித்தனர். இதில் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் சுல்தான்(வயது 35) என்பதும், கலபுரகி டவுன் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் குடிபோதையில் வங்கிக்குள் புகுந்த சுல்தான், பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

கைதான சுல்தான் மீது சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பொம்மை துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here