கோவிட் 19 கிருமி தொற்றிலிருந்து நம்மை நாமே காப்போம் – வாசுகி வேண்டுகோள்

நாட்டில் கோவிட் 19 கிருமி தொற்று காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிவது தற்போது அன்றாட வாழ்க்கையில் ஒரு இயல்பான விஷயமாக மாறியிருக்கிறது.

வீட்டிலிருந்து வெளியில் சென்றாலே முகக் கவசம் அணிந்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நாம் அணியும் முகக் கவசத்தை சரியான இடத்தில் வீசுகிறோமா? என்பது தான் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

ஒருவர் அணியும் முகக் கவசம் முறையான இடத்தில் வீசப்பட வேண்டும். ஆங்காங்கே வீசுவதினால் ஒருவரின் தொற்று அல்லது கிருமி மற்றொருவருக்கு பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள்ளது. அதுமட்டுமின்றி சுத்தம் சுகாதாரத்தை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இங்கு ஏற்பட்டுள்ளது.

பொறுப்பற்றவர்கள் ஆங்காங்கே முகக் கவசத்தை வீசிவிடுகின்றனர். அதனை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என்று சாலை ஓரங்களில் வீசப்பட்டிருக்கும் முகக் கவசங்களை தன்னார்வ முறையில் அப்புறப்படுத்தி வரும் ஆர்.வாசுகி (வயது 36) வேதனையுடன் தெரிவித்தார்.

பினாங்கு சுங்கை பாக்காப்பில் வசிக்கும் இவர் பாரிட் புந்தாருக்கு வேலைக்காக செல்லும் வழியில் ஆங்காங்கே வீசப்பட்டு கிடக்கும் முகக் கவசங்களை தனது தம்பி சூரியாவுடன் (வயது 19) அப்புறப்படுத்தியுள்ளார்.

இவரின் இந்த சமூக அக்கறையான செயல் சமூக வலைத்தலங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஒரு நிறுவனத்தில் கணக்காய்வாளராக பணியாற்றும் வாசுகி கூறுகையில் ஆங்காங்கே வீசப்பட்டு கிடக்கும் முகக் கவசங்கள் மீண்டும் மக்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் அவைகளை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார்.

கணவருடன் மோட்டார் சைக்கிளிலில் வேலைக்கு செல்லும் போது சாலை ஓரங்களில் கிடக்கும் முகக் கவசங்களை அப்புறப்படுத்துவது தற்போது தம்முடைய அன்றாடப் பணியாகி விட்டதாகவும் அவர் சொன்னார்.

இன்னும் முழுமையாக அடங்காத கோவிட் 19 கிருமி தொற்று கண்ட இடங்களில் வீசப்படும் முகக் கவசத்தால் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மனதை உருத்தி வருகிறது.

சாலை ஓரங்களில் வீசப்பட்டு கிடக்கும் முகக் கவசங்களில் கிருமிகள் இருந்தால் அது என்னையும் என் குடும்பத்தையும் மட்டுமின்றி சாலை பயனீட்டாளர்கள், பெரியர்வர்கள், குழந்தைகள் என அனைவரையுமே பாதிக்கும்.

முகக் கவசம், கைகளில் உறை போன்ற அனைத்து பாதுகாப்புகளுடன் தான் வாசுகி இந்த பணிகளை செய்து வருகிறார். இருந்தாலும் தொற்று நமக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணியை வாசுகி செய்து வருகிறார்.

சாலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும் முகக் கவசங்களை ஒரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு இருக்கமாக கட்டி வீட்டில் வைத்திருக்கிறேன். அவற்றை அழிப்பதற்கு இன்னும் சரியான இடம் இல்லை. அதானல் அவைகளை தனியாக வைத்திருக்கிறேன்.

தற்போது ஞாயிற்றுக் கிழமையில் தான் இந்த பணியில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். காரணம் மற்ற நாட்களில் வேலை செய்வதால் அதற்கே நேரம் போய் விடுகிறது.

இந்த பணிகள் தொடர்பில் படங்கள், வீடியோக்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சுய தம்பட்டம் அல்லது விளம்பரம் தேடுவதற்காக அல்ல மாறாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் என்று வாசுகி கூறினார்.

நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் தாம் செய்யும் இந்த பணி ஒரு சிறிய பங்கு தான். இந்த பணிக்கு பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவில்லை. முகக் கவசத்தை ஆங்காங்கே வீசக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய முதமை நோக்கம்.

எனவே ஆங்காங்கே முகக் கவசத்தை வீசுவதை தவிர்த்து கொள்ளுங்கள். கோவி 19 கிருமி தொற்று இன்னும் நம்மை சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. இது நம்முடைய கடமை என்று நினைத்து செயல்படுவோம். ஒன்றாக இணைந்து கோவிட் 19திற்கு எதிராக போராடுவோம் என்று வாசுகி மக்களை கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here