அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா

மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார தள நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்த ஆய்வில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய பார்வைதான் இது.

கொரோனா வைரஸ் தொற்று, மனித வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி 10 ஆயிரம் பேரை பேட்டி கண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல், இந்தியர்கள் இப்போது ஒழுங்கற்ற தூக்க பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள். ஆரோக்கியமாகவும், உடல் தகுதியுடனும் இருக்க மெனக்கிடுகிறார்கள் என்பதாகும்.

முதல் 21 நாள் ஊரடங்கின்போது, இந்தியாவின் சராசரி தூக்க நேரம் அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அது குறைந்துள்ளது.

44 சதவீதம்பேர், வழக்கத்தை விட தாமதமாக தூங்கச்சென்றிருக்கிறார்கள். 10 சதவீதம்பேர், 2 மணி நேரம் தாமதமாக எழுந்து இருந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் சராசரி தூக்க நேரம் என்பது 6 மணி நேரம் 54 நிமிடம். ஏப்ரலில் இது 4 நிமிடங்கள் குறைந்தது. ஊரடங்கின் தொடக்கத்தில் இருந்து இது 8 நிமிடங்கள் இன்னும் குறைந்துள்ளது.

தூக்க நேரம் தொடர்ந்து குறைந்து வந்திருப்பது, நாம் தூக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று காட்டுகிறது. ஆனால் இது நல்லதில்லை. தூக்கம்தான் நோய் எதிர்ப்புச்சக்தியை கட்டமைப்பதில் மூலைக்கல் ஆகும். 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

ஊரடங்குக்கு முன்பாக 47, 48 சதவீத மக்கள் நள்ளிரவுக்கு பின்னர் தூங்கச்செல்வதை வழக்கமாக்கி இருந்தனர். மார்ச் 22-ந் தேதி ஊரடங்கு தொடங்கியபோது இது மாறியது. 55 சதவீதத்தினர் மார்ச் மாதத்தில் நள்ளிரவுக்கு பின்னர் தூங்கினர். ஏப்ரலில் இது 56 சதவீதமானது. மே மாதம் இது 54 சதவீதமாக குறைந்தது. ஜூனில் இது 51 சதவீதம் ஆனது.

கொரோனா தாக்குதலுக்கு முன் ஜனவரி முதல் மார்ச் தொடக்கம் வரையில் 26-27 சதவீதத்தினர் காலை 8 மணிக்கு பின்னர்தான் எழுந்தனர். மார்ச் 22-க்கு பின்னர் 33 சதவீதத்தினர் 8 மணிக்கு பிறகு எழுகின்றனர். ஏப்ரலில் இது 35 சதவீதமாக அதிகரித்தது. ஆபீஸ் போகத்தேவையில்லை. வீட்டில் இருந்தே பணியாற்றலாம், வெளியே செல்லத்தேவையில்லை. இந்த காரணங்களால் நிதானமாக எழுந்திருக்க தொடங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளியுலக ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும்கூட, நிலையில் மாற்றம் இல்லை.

ஊரடங்குக்கு முன்பாக நீங்கள் எவ்வாறு சுறுசுறுப்பாக இருந்தீர்கள் என்று கேட்டபோது 51 சதவீதத்தினர், நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செல்வதாக கூறினர். 20 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்தனர். 12 சதவீதத்தினர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதாக கூறினர். 11 சதவீதத்தினர் ஊரடங்குக்கு முன்னர் தாங்கள் சுறுசுறுப்பாக இல்லை என்று தெரிவித்தனர்.

முதல் ஊரடங்கு போடப்பட்டபோது, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஜிம் போன்ற உடற்பயிற்சி, உடல் தகுதி கூடங்கள் மூடப்பட்டன. இதனால் 47 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்து தங்களை சுறுசுறுப்பாக்கி கொண்டனர். 31 சதவீதத்தினர் தொடர்ந்து நடைப்பயிற்சி, ஜாக்கிங் பயிற்சி செய்வதாக கூறினர். அதே நேரத்தில் இந்த மாதிரி பயிற்சி எதுவும் செய்ய முடியாதோரின் எண்ணிக்கை ஊரடங்குக்கு முன்னர் 11 சதவீதமாக இருந்தது, ஊரடங்குக்கு பின்னர் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 46 சதவீதத்தினர் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போக தொடங்கி உள்ளனர்.

ஜிம் போன்ற உடற்பயிற்சி கூடங்கள் முழுமையாக இயங்காத நிலையில் 32 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்கிறார்கள். 6 சதவீதத்தினர் மாடிப்படியேறுவதை உடற்பயிற்சியாக எடுத்துக்கொள்கின்றனர். உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியாதவர்கள் எண்ணிக்கை ஊரடங்குக்கு முன்பு போல 11 சதவீதம் என்ற அளவுக்கு திரும்பி உள்ளது.

சாப்பாட்டை பொறுத்தமட்டில், ஊரடங்குக்கு முன்னர் வாரம் 1 முறைக்கு மேல் 32.1 சதவீதத்தினர் வெளியே ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். தற்போது இந்த எண்ணிக்கை 11.3 சதவீதமாக குறைந்து விட்டது.

70 சதவீதத்தினர் வீட்டில் சமைத்த உணவுமுறையையே முழுமையாக பின்பற்றுவதாக கூறி உள்ளனர்.

தற்போது நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்று கேட்டபோது 53 சதவீதத்தினர் ஆரோக்கியமாகவும், 13 சதவீதத்தினர் மிகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறினர். தற்போது, பெரும்பான்மையோர் வீட்டில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

4 சதவீதத்தினர் மட்டும் தங்களது தற்போதைய உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here