நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம்

இந்தியாவை தூய்மையான நாடாக்கும் நோக்கில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தூய்மைப்பணியை சிறப்பாக செய்யும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ‘ஸ்வச் சர்வேக்‌ஷன்’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அதாவது 5-வது ஸ்வச் சர்வேக்‌ஷன் விருதுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் மற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பினை நடத்தி பட்டியலை தயாரித்தது. இதன்படி நாட்டின் 4 ஆயிரத்து 242 நகரங்கள், 62 ராணுவ குடியிருப்புகள், கங்கை நதி கரையில் உள்ள 97 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 1 கோடியே 87 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், நேற்று டெல்லியில் காணொலி வாயிலாக நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டுக்கான தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மந்திரி ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.

இதில், நாட்டின் தூய்மையான நகரங்களில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்தது. ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக இந்த நகரம் தான் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தூரை அடுத்து, குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் 2-வது இடத்தையும், மராட்டியத்தின் நவிமும்பை 3-வது இடத்தையும் பிடித்து உள்ளன.

ஒட்டுமொத்த தூய்மையான மாநிலங்களின் பட்டியலில் 100-க்கும் அதிகமாக உள்ளாட்சி அமைப்புகளை கொண்ட பிரிவில் சத்தீஸ்கார் மாநிலம் முதலிடத்தை பிடித்தது. 100-க்கும் குறைவாக உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்கள் பிரிவில் ஜார்கண்ட மாநிலம் முதல் இடம் பெற்றது.

நாட்டின் தூய்மையான ராணுவ குடியிருப்பு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாட்டின் தூய்மையான கங்கை நதியோரத்தில் உள்ள நகரமாக பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.யாக இருக்கும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தேர்வாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here