அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் மத்திய பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்ல வேண்டுமானால் பிரம்மபுத்திரா நதியை கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் படகுகளைப் பயன்படுத்தி பிரம்மபுத்திரா நதியை கடந்து செல்வார்கள்.
மழைக்காலத்தின் போதும் நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டும் போதும் இந்த படகு சேவை நிறுத்தப்படும். அந்த சமயங்களில் மக்கள் போக்குவரத்துக்கு வேறு வழியின்றி மிகவும் அல்லல்படுவார்கள்.
இதனால் பிரம்மபுத்திரா நதியின் மீது ரோப்கார் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ரூ.28 கோடி செலவில் ரோப்கார் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.
2009-ல் இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தொழில் துறை ஆய்வு மையத்தின் எதிர்ப்பால் 2011-ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் 2017-ம் ஆண்டில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரோப்கார் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது. மாநில நிதி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி ஹிமான்டா பிஷ்வா ஷர்மா இதனை தொடங்கி வைத்தார்.
1.8 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் இந்த ரோப் கார் வழித்தடம் தான் இந்தியாவிலேயே நதிக்கு மேல் செல்லக் கூடிய மிக நீளமான ரோப்கார் வழித்தடம் ஆகும்.
இந்த ரோப் கார் வழித்தடத்தில் ஒவ்வொரு காரிலும் 30 பயணிகள் பயணிக்க முடியும். எனினும் கொரோனா நெறிமுறைகள் இருப்பதால் ஒரு காரில் 15 பயணிகள் மட்டுமே தற்போதைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.