விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
சூரரைப் போற்று படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படமும் அவ்வாறே வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாகவும் கூறப்படுகிறது.
தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்கும் திட்டத்தில் உள்ளார்கள். மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.