குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலின் போதே அமெரிக்க துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், துணை ஜனாதிபதி மைக் பென்சும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும், துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செனட் சபை எம்.பி. கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் ஜோ பைடனும், கமலா ஹாரிசும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் நடத்தப்படுகிறது.இதில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டிரம்பும், மைக் பென்சும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஐ.நா.வுக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மற்றும் ஜனாதிபதி டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் ஆகிய இருவரும் மாநாட்டில் உரையாற்றினர்.

அவர்கள் இருவரும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்து டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாநாடு நடந்த மேடையில் ஜனாதிபதி டிரம்ப் திடீரென தோன்றினார். அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்க வரலாற்றில் வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால் அமெரிக்காவை சீனா ஆளும் நிலை ஏற்படும். நமது நாடு ஒருபோதும் பொதுவுடைமை நாடாகாது. இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்” என உறுதிபட தெரிவித்தார்.

முன்னதாக டிரம்பின் பிரசார குழுவினர் மாநாட்டில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் 10 மாதங்களில் அமெரிக்காவில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; அமெரிக்க நிறுவனங்களில் உள்நாட்டவர்களுக்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவது தடை செய்யப்படும்; ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும்; சீன நிறுவனங்களுக்கு அயலக சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படாது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here