கொரோனாவை தடுத்து நிறுத்த ஏற்ற முக கவசம் எது?

முக கவசம்- இன்றைய வாழ்வில் அத்தியாவசியமாகி விட்டது. உடைகள் மானம் காப்பதுபோல இந்த முக கவசமானது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஒரு தடுப்பூசி வருகிற வரையிலும், முக கவசம்தான் பாதுகாப்பான தடுப்பு கவசமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி விட்டது.

முக கவசங்கள் விதவிதமாக நாளும் வந்து கொண்டிருக்கின்றன. ஏன், அணியும் உடைகளுக்கு ‘மேட்ச்’ ஆகக் கூட முக கவசங்கள் சந்தையில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் எல்லா முக கவசங்களும் கொரோனாவை தடுத்து நிறுத்துகிற ஆற்றலை கொண்டிருக்கின்றனவா என்றால் அந்தக் கேள்விக்கு பதில் இல்லை என்பதுதான். இதையொட்டி அமெரிக்காவில் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 14 முக கவசங்களை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டார்கள். அவர்களது ஆய்வில் சாதாரணமாக சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக நம்மை வைத்திருக்கும் என்று கண்டுபிடித்தார்கள். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் மிக குறைவான பயன் அளிக்கத்தக்கது எனவும் அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி பத்மநாப பிரசன்ன சிம்காவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி பிரசன்ன சிம்கா மோகனராவும் எந்த முக கவசம், உண்மையிலேயே கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் சிறப்பான பங்கு பணி ஆற்றுகிறது என்பதை ஆராய்ந்து வந்தார்கள்.

பல்வேறு முக கவசங்களை அணியும்போது, இருமலின் ஓட்ட புலங்களை சோதனைக்காக காட்சிப்படுத்தினர்.

இது பற்றிய முடிவுகளை அவர்கள் ‘பிசிக்ஸ் ஆப் புளூய்ட்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இதில், என்-95 முக கவசங்கள்தான் கொரோனாவை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த முக கவசங்கள்தான், இருமலின் கிடைமட்ட பரவலை குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முக கவசங்கள் இருமலின் ஆரம்ப வேகத்தை குறைத்து, அதன் பரவலை 0.1 முதல் 0.25 மீட்டர் தொலைவுக்குள் மட்டுப்படுத்தின என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

முக கவசம் அணியாத நிலையில், இருமல் 3 மீட்டர் தொலைவுக்கு பயணிக்கும், ஆனால் அதை என்-95 முக கவசம், 0.1 முதல் 0.25 மீட்டர் தொலைவுக்குள் கட்டுப்படுத்தி விடும்.

அடர்த்தியும், வெப்பநிலையும், சிக்கலான தொடர்புடையவை, இருமல், அதன் சுற்றியுள்ள பகுதியை விட வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

‘ஸ்க்லீரன் இமேஜிங்’ என்ற தொழில்நுட்பத்தை இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தி, அடுத்தடுத்த படங்களின் மீது இருமலின் இயக்கத்தை கண்காணிப்பதின் மூலம், வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளின் வேகம் மற்றும் பரவலை மதிப்பிட்டனர்.

அதில்தான் என்-95 முக கவசங்கள், சிறந்த செயல் திறனை கொண்டிருக்கின்றன, 0.1 முதல் 0.25 மீட்டர் தொலைவுக்குள் நீர்த்துளிகளை முழுமையாக கட்டுப்படுத்துகின்றன என கண்டறிந்து இருக்கிறார்கள்.

இதே போன்று டாக்டர்கள் பயன்படுத்துகிற மருத்துவ முக கவசம், 0.5 முதல் 1.5 மீட்டர் தொலைவுக்குள் நீர்த்துளிகளை கட்டுப்படுத்துகின்றனவாம்.

விஞ்ஞானி பத்மநாப பிரசன்ன சிம்கா கூறும்போது, “ஒரு முக கவசமும், அனைத்து துகள்களையும் வடிகட்டாவிட்டாலும், அத்தகைய துகள்களின் மேகங்கள் வெகுதொலைவுக்கு பயணிப்பதை தடுக்க முடிந்தால், எதையும் செய்யாமல் இருப்பதை விட இது சிறந்தது. அதிநவீன முக கவசங்கள் கிடைக்காதபட்சத்தில், முக கவசம் அணியாமல் இருப்பதை விட எந்தவொரு முக கவசமும் சிறந்ததுதான். எந்த முக கவசமும், தொற்று நோய் பரவலை மெதுவாக்குவதில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். ஆக முக கவசம் அணியாமல் இருப்பதை விட எந்தவொரு முக கவசத்தையாவது அணிந்து இருப்பது தொற்று பரவலை மெதுவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here